இன்று இளையராஜா, மணிரத்னம் பிறந்தநாள்

தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் இளையராஜா, மணிரத்னம் இருவரும் இன்று பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.

இந்திய திரையுலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளான இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகிய இருவர் பிறந்த தினம் இன்று. கடந்த 1983 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘பல்லவி அனுபல்லவி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மணிரத்னம். இந்த திரைப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா, அந்த சமயத்தில் தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு, அடுத்ததாக மணிரத்னம் தமிழில் இயக்கிய ‘பகல் நிலவு’ திரைப்படத்திற்கு இளையராஜா மீண்டும் இசையமைத்தார். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்திடவே, அடுத்து மணிரத்னம் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் இளையராஜாவின் இசை ஒலித்தது. மொளன ராகம் திரைப்படத்தின் பாடல்களும், பின்னனி இசையும் இன்று வரை ரசிகர்களிடையே எவர்கிரீன் ஹிட்டாக நிலைத்துள்ளது.

அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ திரைப்படம், இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. அந்த திரைப்படத்தில் இளையராஜாவின் பின்னனி இசை பெரிதும் பேசப்பட்டது. இதற்கடுத்து அக்னி நட்சட்திரம், அஞ்சலி திரைப்படங்களிலும் இவர்களது கூட்டணி தொடர்ந்த நிலையில், அடுத்ததாக மலையாள நடிகர் மம்முட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடித்த ‘தளபதி’ திரைப்படம் வெளியானது.

மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான ‘தளபதி’ திரைப்படம் மணிரத்னம்-இளையராஜா கூட்டணியில் அமைந்த கிளாசிக் ஹிட்டாக இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும், அதன் பின்னனி இசையும் கலைத்துறையில் முன்னேறத் துடிக்கும் படைப்பாளிகளுக்கு ஒரு பாடமாகவே விளங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு புதிய திறமைகளை கண்டறிவதில் ஆர்வம் காட்டிய இயக்குனர் மணிரத்னம், தான் அடுத்ததாக இயக்கிய ‘ரோஜா’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் என்ற புதுமுக இசையமைப்பாளரை களமிறக்கினார். இதன் பிறகு இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமானை தனது ஆஸ்தான இசையமைப்பாளராக வைத்துக் கொண்டார். இளையராஜா தனது இசைப்பயணத்தை, அதே புத்துணர்ச்சியோடு இன்று வரை தொடர்ந்து வருகிறார்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், மணிரத்னம்-இளையராஜா என்ற இந்த கூட்டணி கலைத்துறைக்கு அளித்த படைப்புகள் அனைத்தும் ரசிகர்களால் என்றும் சிலாகிக்கப்படும். இன்று ஜூன் 2 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னத்திற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related posts