வைரலாகும் ரஜினிகாந்த் – மோகன்பாபு புகைப்படங்கள்

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் மோகன்பாபு இணைந்து எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படஙக்ள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முன்னணித் திரை நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்துக்கு தெலுங்குத் திரையுலகில் பல நண்பர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் நடிகர் மோகன் பாபு.
இதுவரை 500 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் மோகன்பாபுவும், ரஜினிகாந்தும் திரையுலகில் அறிமுகமான காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைக்கும் அளவுக்கு நெருக்கமான இவர்கள் நட்பு குறித்து பல பேட்டிகளில் இருவருமே பேசியுள்ளனர். ரஜினிகாந்த் எழுதிய கதையில் மோகன்பாபு நடித்து 2000-ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. இன்று வரை இவர்களது இரண்டு குடும்பங்களும் நட்பு பாராட்டி வருகின்றன.
சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்கிற ரஜினிகாந்தின் முடிவுக்குப் பின்னால் மோகன்பாபுவும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் ’அண்ணாத்தே’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.படப்பிடிப்பு இடைவேளையில் மோகன்பாபுவின் மகள் லக்‌ஷ்மி மன்சு ரஜினிகாந்தை சந்தித்து அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, சில தினங்களுக்கு முன் பகிர்ந்திருந்தார். தற்போது மோகன்பாபு – ரஜினிகாந்த் என இருவரையும் வைத்துத் தனியாக ஒரு ஃபோட்டோஷூட்டே நடத்தியிருக்கிறார் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு.
இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விஷ்ணு, “அசல் கேங்க்ஸ்டர்கள் – ரஜினிகாந்த், மோகன்பாபு மற்றும் கோமாளித்தனமான விஷ்ணு மன்சு” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Related posts