விசாரணை காலத்தை இழுத்தடிக்கும் செயலால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடே இடம்பெற்று வருவதால் கத்தோலிக்கர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமைச்சின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய பின்னர் அவரது கூற்று தொடர்பில் எதிர் கட்சியினர் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன உரையாற்றுகையில்,

மொஹமட் நௌபர், மொஹமட் அன்வர், மொஹமட் ராசிக், அஹமட் இல்ஹாம், சைதுன் மொஹமட் ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது போயுள்ளது. இங்கு விசாரணைகள் தொடர்பான ஆவணங்கள் முழுமையானது அல்ல என்று சட்ட மாஅதிபர் கூறியுள்ளார்.

இந்த இடத்தில் சூழ்ச்சி உள்ளதா? என்ன அந்த சூழ்ச்சியென்று நீதி அமைச்சருக்கு கூற முடியும். நாளுக்கு நாள் இந்த விசாரணை காலத்தை இழுத்தடிக்கும்போது கத்தோலிக்கர்களாகிய எங்களுக்கு அநீதியே இழைக்கப்படுகின்றது என்றார்.

ஹெக்டர் ஹப்புகாமி எம்பி உரையாற்றுகையில்,சம்பவத்தை தவிர்த்தவர்கள் தொடர்பாகவும் மற்றும் அதற்கு முன்னர் போதனைகளை நடத்தியவர்கள் தொடர்பாகவும் மட்டுமே சட்டம் செயற்படுத்தப்படுகின்றது. ஆனால் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார் என்று கூறப்படவில்லை. இதில் பின்னின்று செயற்பட்ட சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கான பதிலையே நாங்கள் எதிர்பார்கின்றோம் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட ரவூப் ஹக்கீம் எம்பி, நான் பிரதான சூத்திரதாரி தொடர்பாக பல தடவைகள் கூறியுள்ளேன். இஸ்ரேலிய புலனாய்வு பிரிவு இதன் பின்னால் இருந்துள்ளதா என்ற விடயம் இதில் ஆராயப்பட வேண்டும். அது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கவிதை எழுதியவர்களை கைது செய்துள்ளனர். அந்தக் கவிதையை மொழிபெயர்த்து வசித்துப் பாருங்கள் அது புரியும். கவிஞர்கள், இலக்கியவாதிகளை கைது செய்வதனூடாக விசாரணை மீதான நம்பிக்கை இல்லாது போகின்றது என்றார்.

மனுஷ நாணயக்கார எம்பி உரையாற்றுகையில்,

இதில் அடிப்படைவாதம் இருந்துள்ளதாகவே பேராயர் தெரிவித்துள்ளார். இதேவேளை புலனாய்வு அதிகாரிகளினால் சாட்சியங்களில் வெளியான தகவல்கள் தொடர்பாக ஆராய வேண்டும். யார் அது தொடர்பான தகவல்கள் வெளியே வருவதை தடுத்தவர்கள் என்பதனை தேடிப்பார்க்க வேண்டும்.

நௌபர் மௌவி போன்றோர்கள் அடிப்படைவாதத்தை பரப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இந்த சம்பவத்தில் அடிப்படைவாதிகளை பயன்படுத்த பின்னணியில் நின்றவர்கள் யார் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Related posts