10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது

மட்டக்களப்பு நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த 10 பேரை நேற்று (18) கைது செய்து, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வை தலைமை வகித்தவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு அவருடைய வீட்டிற்கு 3 தடவைகள் பொலிஸார் சென்ற போதும், அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரின் மனைவியார் அதனை பெறமாட்டேன் என தெரிவித்த நிலையில் அவரின் வீட்டின் கதவில் அந்த நீதிமன்ற தடை உத்தரவை பொலிஸார் ஒட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட லவக்குமார் நேற்று பகல் 10 பேருடன் சென்று நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி அதன் பின்னர் பூக்களை கடலில் தூவினர்.

இதனை படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்த நிலையில் பொலிஸார் குறித்த 10 பேரையும் அடையாளம் கண்டு அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை 3 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியினை பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Related posts