கே.பாக்யராஜ்-பூர்ணிமா இருவருக்கும் கொரோனா

டைரக்டர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் மிகக் கடுமையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் பல்வேறு பிரபலங்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தற்போது முன்னணி டைரக்டர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை சாந்தனு தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சாந்தனு தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்.” இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.

சாந்தனுவின் டுவீட்டைத் தொடர்ந்து, கே.பாக்யராஜ் விரைவில் பூரண நலம்பெற பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related posts