நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
கடந்த 1-ம் தேதி முதல் முறையாக தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. கடந்த 2-ம் தேதி 3.92 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நாள் தோறும் உயிரிழப்புகளும் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.
உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ம்ருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகின்றன. விளையாட்டு வீரர்கள் பலரும் இந்தியாவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டன் இந்தியாவுக்காக குரல் கொடுக்குமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. புதிய பாதிப்புகள் கடந்த ஐந்து நாட்களாக புதிய உச்சம் தொட்டு வருகின்றன. நீங்கள் நிதி உதவி அளிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களால் முடிந்த தளத்தில் விழிப்புணர்வை உருவாக்க குரல் கொடுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ஜேம்ஸ் மெக்கே, வில் ஸ்மித், நிக் ஜோனஸ், கேட்டி பெர்ரி உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் இந்தியாவுக்காக உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்காக குரல் கொடுங்கள்’- நடிகை ஜெனிஃபர்
