இந்தியாவின் நிலையே இங்கும் ஏற்படலாம்

நாட்டு மக்கள் சுகாதார சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றாது செயற்பட்டால் எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் இலங்கையிலும் இந்தியா போன்றதொரு நிலைமை உருவாகும் என இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரட்ன தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நாட்டின் அனைத்து மக்களும் சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டில் வைரஸ் தொற்று நோயாளர்களின் தொகை பெருமளவு அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடிக்காத மக்கள் உதாசீனப் போக்குடன் செயல்பட்டால் தற்போது இந்தியாவில் நிலவும் நிலைமையே இலங்கைக்கும் வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டின் தற்போதைய வைரஸ் பரவல் தொடர்பில் விசேட மருத்துவ நிபுணரும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளருமான சந்திம ஜீவந்தர தெரிவிக்கையில்;
நாட்டில் பிரித்தானியாவின் திரிபுபடுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரவல் நிலவுகின்றது.
இந்த வைரஸானது வயது முதிர்ந்தவர்களை மட்டுமன்றி இளம் வயதினரையும் பாதிக்கக் கூடியது. அதற்கிணங்க அனைவரும் முகக்கவசங்களை கண்டிப்பாக பாவிப்பது அவசியம்.
வீடுகளில் அலுவலகங்களில் இருக்கும்போதும் முகக்கவசத்தை தொடர்ச்சியாக அணிந்துகொள்வது நல்லது.
புதிய வைரஸ் பரவலானது பெருமளவிலான வைரஸ் தொற்றாளர்களுக்கு எந்தவித நோய் அறிகுறிகளும் வெளிப்படாமை அச்சுறுத்தலான நிலையை தோற்றுவித்துள்ளது.
அனைத்து வயதினரும் தம்மை பாதுகாத்துக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்

Related posts