’வலிமை’யில் அஜித் உழைப்பு: கார்த்திகேயா பகிர்வு

‘வலிமை’ படத்துக்காக அஜித்தின் உழைப்பு குறித்து நடிகர் கார்த்திகேயா பகிர்ந்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், நேற்று (மே 1) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இது அவருடைய 50-வது பிறந்த நாள் என்பதால் பல்வேறு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் நடிகர் கார்த்திகேயாவின் வாழ்த்து பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் வில்லனாக நடித்து வருகிறார் கார்த்திகேயா. இது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அஜித்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கார்த்திகேயா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“சர்வதேச உழைப்பாளர்கள் தினத்தன்று தல அஜித்தின் பிறந்த நாள். இது யதேச்சையான ஒன்றாக இருக்கலாம். ஆனால், உடலில் எக்கச்சக்க காயங்களையும் மீறி ஒவ்வொரு காட்சியிலும் அவரது கடின உழைப்பைப் பார்க்கும்போதும், படப்பிடிப்பில் யார் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் அவர்களுக்கு இவர் கொடுக்கும் மரியாதையைப் பார்க்கும்போதும் அது யதேச்சையானதல்ல, சரியானதுதான்”.
இவ்வாறு கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.
போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்தது. இன்னும் வெளிநாட்டில் சுமார் ஒரு வார காலப் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் நேற்று (மே 1) வெளியாகவிருந்த ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Related posts