நடிகர் விவேக்கிற்கு ‘எக்மோ’ சிகிச்சை

நடிகர் விவேக்கிற்கு’எக்மோ’சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விசாரித்து உள்ளார்

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
நடிகர் விவேக்கிற்கு ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவர்கள் குழு நடிகர் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியதாவது:-

நடிகர் விவேக், தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்தார்.நடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளார் என கூறினார்.

நடிகர் விவேக் நேற்று தான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் விவேக்கின் உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விசாரித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது பற்றி கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன் விவேக். என்னுடைய பிரார்த்தனைகளும் வாழ்த்துகளுக்கும் உங்களுக்கு உண்டு. சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர்களிடம் பேசினேன். சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் தொடர்பில் உள்ளேன். விரைவில் நலம்பெற வேண்டும் விவேக் என்று கூறியுள்ளார்.

Related posts