‘தளபதி 65’ அப்டேட்: நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம்

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வருகிறது படக்குழு. மேலும், இதில் விஜய்க்கு நாயகியாக நடிக்கப் பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்துக்குப் பிறகு பூஜா ஹெக்டே எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து விஜய்க்கு நாயகியாக அவரை ஒப்பந்தம் செய்து, மீண்டும் தமிழுக்கு அழைத்து வருகிறது ‘தளபதி 65’ படக்குழு.

Related posts