தளபதி 65′ ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு

‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இடங்களைத் தேர்வு செய்து வருகிறார் நெல்சன் திலீப்குமார்.
‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ‘தளபதி 65’ என அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், விஜய்யுடன் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. முதலில் ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வருகிறார் நெல்சன் திலீப்குமார். தான் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதற்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்குப் பிறகே இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன், படக்குழுவினர் வெளிநாட்டுப் படப்பிடிப்புக்குக் கிளம்புவார்கள் எனத் தெரிகிறது.

Related posts