நான் ஏன் பிறந்தேன்..! இன்றைய சிந்தனை 06.03.2021

நான் ஏன் பிறந்தேன்..!

இந்தக் கேள்விக்கு வாழ்க்கை எல்லாம் விடை தேடி களைத்ததாக ஞானிகள் சொல்கிறார்கள். சிலர் இதை விளக்க முற்பட்டனர், அதன் மூலம் அது விளக்க முடியாத தத்துவம் என்பதை விளக்கியும் சென்றனர்.

இந்த ஒற்றைக் கேள்விக்கு விடை கண்டு பிடிக்கவே நீ இந்தப் பூமியில் பிறந்திருக்கிறாய், அதன் பெயர்தான் ” வாழ்க்கைத் தேடல்..”

வாழ்க்கை என்பது மைதானம் போன்றது, பயிற்சி எடுக்காத ஒருவன் மைதானத்திற்குள் இறங்க முடியாது. பந்து வருகிறது, தடுக்கிறான் ஆடுகிறான், சில நேரம் வெல்கிறான் பல தடவைகள் தோற்கிறான்.

ஒரு சாதாரண விளையாட்டிற்கே பயிற்சி எடுக்காமல் மைதானத்தில் இறங்க முடியவில்லை என்றால், இந்த வாழ்க்கை என்ற மைதானத்தில் மட்டும் பயற்சி எடுக்காமல் நீ வந்திருக்கிறாய் என்று எப்படிக் கூற முடியும்..? சரியான பயிற்சி இல்லாமல் இந்த பூமிப்பந்தில் இறங்க உன்னை ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டார்கள். உன்னால் முடியும், உனக்கான கல்வி என்றோ முடிந்துவிட்டது.

அன்றாடம் உன்னை நோக்கி ஆயிரம் சவால்கள் வருகின்றன. அவற்றை எல்லாம் வெல்வதற்கு உன்னால் முடியும். அதற்கான பயிற்சிகளை முடித்துவிட்டுத்தான் களம் இறங்கியிருக்கிறாய் கலங்கிவிடாதே.

ஆனால் பல தடவைகள் தோற்றுவிடுகிறாய், அதனால் மனமும் சோர்ந்துவிடுகிறாய். ஏன்..? பதில் மிக எளிமையானது.

எப்படி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன், பதில் தெரியாத கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியுமென தலையாட்டிவிட்டு பரீட்சையில் விழி பிதுங்கி நிற்பானோ..? அது போலத்தான் பிறப்பிற்கு முன்பிருந்த பயிற்சிப் பள்ளியில் நீயும் பொய் சொல்லியிருக்கலாம் என்பதைக் கண்டு கொள். தவறுகளை திருத்தி வெற்றி பெறு.

ஆனால் ஒன்று சாதாரண வெற்றி தோல்விகளால் எதுவும் நடப்பதில்லை. உன் பிறப்பிற்கு ஓர் இறுதிப் பெரும் இலக்கு இருக்கிறது. அதற்கு கணிசமான வெற்றிகளும் தோல்விகளும் அவசியம் என்பதாலேயே அப்படி நடக்கிறது. கலங்கிவிடாதே..

கொஞ்சம் நில்.. இப்போது உன்னையே நீ கேட்டுப்பார்.. நான் ஏன் பிறந்தேன்..?

விடை காண, நீ சந்தித்த தோல்விகளையும், வெற்றிகளையும் வரிசையாக அடுக்கு. அப்போது உன் முன்னால் ஒரு வடிவம் வரும். அந்த வடிவத்தை, மனதில் ஓவியமாக வரைந்து கொள். அதை தராசின் ஒரு பக்கம் போடு, உன்னை மறுபக்கம் போடு. நிறுத்துப்பார் ஆச்சரியப்படுவாய் நிறை சரியாக இருக்கும்.

அப்போதும் முழுமை என்பது தெரியாது, ஆனால் அந்த மூலப்பொருளை வைத்து இந்தப் பூமியில் ஒன்றை உருவாக்கிவிட்டு செல்லத்தான் நீ வந்திருக்கிறாய் என்பது முடிவில் தெரியும். உனக்கு துன்பம் செய்தோர் இன்பம் செய்தோர் என்ற பேதங்கள் மறையும். அனைவரும் உன்னை உருவாக்கிய நாடக பாத்திரங்களே என்ற அதிசயத்தையும் காண்பாய். உன் பிறவி இலட்சியத்தை இவைகள் இல்லாவிட்டால் அடைய முடியாது என்பதையும் கண்டறிவாய்.

இதை யார் உனக்கு சொன்னதென்று கேட்கிறாயா..? யாரும் சொல்லவில்லை என் வாழ்வில் நான் கண்ட இரகசியம் உனக்கு சொல்கிறேன்.

நீ ஏன் பிறந்தாய்..? எனக்கு தெரிகிறது. ஆனால் அது உனக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசையால் இதை எழுதுகிறேன் அவ்வளவுதான். நான் ஏன் பிறந்தேன்..? உன்னையே நீ கேள்.. இனி விடை கிடைக்கும்.

கி.செ.துரை 05.03.2021

Related posts