மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் பங்கேற்ற அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தபோது 4 பேர் கொரோனா தொற்றில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர். ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் சில நாட்கள் தனிமைப்படுத்தி ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார். பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். தொடர்ந்து அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவித்த அவர், தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்

இதனிடையே படப்பிடிப்புக்காக உடல்நிலையை கருதி ரஜினிகாந்த் மீண்டும் ஐதராபாத் செல்வது சிரமம் என்று கருதிய படக்குழுவினர் சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன்படி அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய படப்பிடிப்பு இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்ததாக மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, இவர்கள் கூட்டணியின் வெளியான பேட்ட படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts