தனுஷ் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட ரசிகர்கள் எதிர்ப்பு

தனுஷ் ரசிகர்களும் ஓ.டி.டியில் ஜகமே தந்திரம் படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டி வருகிறார்கள்.

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்துக்கு ஒரு ஓ.டி.டி தளம் அதிக விலை கொடுக்க முன்வந்து இருப்பதாகவும் இதனால் ஓ.டி.டியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தனுசுக்கு ஓ.டி.டியில் படத்தை வெளியிட விருப்பம் இல்லை.

டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ”திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தனுஷ் ரசிகர்களும் ஓ.டி.டியில் ஜகமே தந்திரம் படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டி வருகிறார்கள்.

அந்த சுவரொட்டிகளில் ”தனுசின் வெற்றி படமான ஜகமே தந்திரம். திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு தனுஷ் ரசிகர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளரை கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related posts