நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதன் மூலம் என் மகள் நிர்பயாவுக்கு நீதி கிடைத்திருக்கிறது என்று நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்தார்
கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி குற்றவாளிகள் 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகள் 4 பேரும் தனித்தனியாக தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
இவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஜனவரி22, பிப்ரவரி1, மார்ச் 3 ஆகிய தேதிகளில் டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் தள்ளிப்போனது. இறுதியாக 20ம் தேதி(இன்று) தண்டனை நிறைவேற்ற 4-வதுமுறையாக டெத் வாரண்ட்டை டெல்லிநீதிமன்றம் பிறப்பித்து காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டது.
அதன்படி திஹார் சிறையில் இன்று காலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேருககும் தூக்கு தண்டனை திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகளின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டதை உறுதி செய்து அறிவி்த்தார்.

Related posts