சூரிக்கு ‘அப்பா’வாக நடிக்கிறார் விஜய் சேதுபதி!

தற்போதைய கதாநாயகர்களில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்டவர். கதாநாயகனாக நடிப்பதுடன் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

‘தென் மேற்கு பருவக்காற்று’ படத்தில் சராசரி கதாநாயகனாக அறிமுகமான இவர், படத்துக்கு படம் வளர்ந்து வந்த நிலையில், ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில், வயதான ‘அப்பா’ வேடத்தில் நடித்தார்.

விஜய் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘மாஸ்டர்’ படத்தில், வில்லனாக நடித்தார். இதைத்தொடர்ந்து அவர் மேலும் ஒரு படத்தில், ‘அப்பா’ வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, வெற்றிமாறன் டைரக்டு செய்கிறார். சூரிக்கு ‘அப்பா’வாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அப்பா வேடத்தில், முதலில் டைரக்டர் பாரதிராஜா நடிப்பதாக இருந்தார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அதில் கலந்து கொள்ள பாரதிராஜாவும் ஊட்டிக்கு சென்றார். அங்கு குளிர் கடுமையாக இருந்தது. பாரதிராஜாவினால் அந்த குளிரை தாங்க முடியவில்லை. ‘‘என்னால் இந்த குளிரை தாங்கிக்கொண்டு நடிக்க முடியாது’’ என்று கூறிவிட்டு, அவர் சென்னை திரும்பி விட்டார்.

அவர் நடிக்க இருந்த ‘அப்பா’ வேடத்தில், விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்.

Related posts