ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்த நாளாகும். வருடந்தோறும் பிறந்த நாளன்று அவருடைய வீட்டு வாசலில் ரசிகர்கள் கூடுவார்கள். அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்து ரசிகர்களுடன் சிம்பு பிறந்த நாளைக் கொண்டாடுவார்.
இந்த ஆண்டு தனது பிறந்த நாளுக்கு யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சிம்பு.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு, வணக்கங்கள். எத்தனை தடைகளை நான் கடந்து வந்தாலும் என்னுடன் என்றுமே நின்றிருக்கிறது உங்கள் பேரன்பு. அதுதான் நான் அடுத்தடுத்துப் படங்கள் தருவதற்கும், உடல் எடையைக் குறைத்து உத்வேகமானதற்கும் மிக முக்கியக் காரணம்.
கரோனா காலகட்டத்தில் வெகு விரைவாக முடிக்கப்பட்ட ’ஈஸ்வரன்’ படத்திற்குப் பெரிய வரவேற்பைக் கொடுத்தீர்கள். வெற்றி பெறச் செய்தீர்கள். உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்வதை விட எனது குடும்பம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். உங்கள் அன்பிற்கு நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
எனது பிறந்த நாளன்று நான் உங்களோடுதான் இருக்க வேண்டும். ஆனால், சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை. வெளியூர் செல்கிறேன். என் குடும்பத்தினர் வந்து வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நண்பர்கள் யாரும் என் பிறந்த நாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம்.
உங்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன். நாம் சந்திப்போம். ஒரு சிறு மகிழ்ச்சியாக என் பிறந்த நாளன்று ‘மாநாடு’ டீஸர் வெளியாகும். மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். அனைவருக்கும் அன்பும், நன்றியும். #அன்புசெய்வோம்”.
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.
தற்போது ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வரும் சிம்பு, அதனைத் தொடர்ந்து ‘பத்து தல’ படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

Related posts