மீண்டும் இணையும் சிம்பு – கெளதம் மேனன்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இருவரும் இணைந்து பணிபுரிந்தார்கள். சிம்பு – கெளதம் மேனன் இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள்.
தற்போது சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இன்று (ஜனவரி 28) இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது சிம்பு நடிப்பில் உருவாகும் 47-வது படமாக உருவாகவுள்ளது.
கரோனா ஊரடங்கு சமயத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ கதையைத் தயார் செய்து வைத்திருந்தார் கெளதம் மேனன். அதிலிருந்து ஒரு காட்சியை மட்டும் எடுத்து ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் குறும்படமாக எடுத்து வெளியிட்டார். அதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
தற்போது இணைந்துள்ள படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ ஆக இருக்குமா என்பது தொடர்பாகப் படக்குழு அறிவிக்கவில்லை. ‘மாநாடு’ படத்தை முடித்துவிட்டு, ‘பத்து தல’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.

Related posts