இன்னும் ஆறு வருட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்த சசிகலா ஒருவழியாக விடுதலை ஆகி விட்டார். இனி அ.தி.மு.கவில் என்ன நடக்கும்? சசிகலாவை வைத்து பா.ஜ.க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் 2 வருடத்துக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த குற்றவாளிகள், விடுதலையான நாளில் இருந்து 6 வருடத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி தண்டனை அனுபவிக்கத் தொடங்கிய நாளில் இருந்து சசிகலா 10 வருடத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இதில் 4 வருடம் சிறைத் தண்டனைக் காலம் நேற்றுமுன்தினத்துடன் முடிவடைகிறது. அப்படியானால், நேற்று முதல் 6 வருடத்துக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது.

அதேசமயம் கட்சிப் பதவிகளை வகிக்க எந்தத் தடையும் இல்லை. இந்த விடயத்தைத்தான் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது. பா.ஜ.கவின் திட்டமும் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

பா.ஜ.கவுக்கு ஒரே எண்ணம் தி.மு.கவை வீழ்த்த வேண்டும் என்பதாகும். அ.தி.மு.கவின் பலத்தை கூட்டினால்தான் பா.ஜ.க ஓரளவாகது வெற்றி பெற முடியும். அதனால், அ.ம.மு.க – அ.தி.மு.கவை இணைக்க யோசித்து வருகிறது. அதாவது சசிகலா தலைமையில் தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும் என்பது பா.ஜ.கவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அதுமட்டுமல்ல, கடந்த 2019 தேர்தலில் அ.ம.மு.க கணிசமான வாக்குகளை கையில் வைத்துள்ளது. இதுபோக ‘குக்கரை’ முன்கூட்டியே வாங்கி வைத்துள்ளது. சசிகலாவை அ.தி.மு.கவில் இணைத்துக் கொள்ளவில்லையானால், அதன் எதிர்த்ரப்பு வாக்குகளும், தென்மண்டலத்தில் சசிகலாவுக்கு உள்ள சமுதாய வாக்குகளும், அப்படியே அ.ம.மு.கவுக்கு வந்து சேரும். அது அ.தி.மு.கவுக்குதான் சறுக்கலைத் தரும். இதையும் பா.ஜ.க நன்றாகவே கணக்கு போட்டு வைத்துள்ளது. இப்போது இந்த விஷயத்தில் பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறார். எடப்பாடியார் தயக்கம் காட்டுகிறார்.

ஒருவேளை எடப்பாடியாரை யாரேனும் சமாதானப்படுத்தவும் முயலலாம். அல்லது பன்னீர் தலைமையில் அ.தி.மு.கவை பிரித்து, இரட்டை இலை சின்னத்தை முடக்கி, பா.ம.க, அ.ம.மு.க, தே.மு.தி.க என ஓர் அணியையும் பா.ஜ.க உருவாக்கலாம். ஆக, எடப்பாடியார் சம்மதித்தால் ஒரு முடிவு, அவர் சம்மதிக்காவிட்டால் வேறு முடிவு என 2 தெரிவுகளை கையில் வைத்துள்ளது பா.ஜ.க.

இனி, சசிகலா நிலைமையை எடுத்துக் கொண்டால், அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை. உடலில் பல பிரச்சினைகள் அவருக்கு ஏற்கனவே இருக்கின்றன. முன்பு போல அவரால் கட்சிப் பணிகளை கவனிக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை, கட்சியில் தீவிரம் காட்டினாலும் சிறைவாசத்தை சொல்லி அவரால் வாக்கு கேட்க முடியாது. ஏனென்றால், உள்ளே போனது ஊழல் வழக்கில். அதனால், இந்தத் தண்டனையைக் காரணம் காட்டி அனுதாபமும் தேட முடியாது. இவரால் ஜெயலலிதாவுக்கும் கெட்ட பெயர் என்பதுதான் பொதுவான அ.தி.மு.கவினரின் கருத்து.

“தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா” என்று கோகுல இந்திரா ஒரு வார்த்தை சொன்னார். அதற்கே ஆளாளுக்கு சமூக ஊடகங்களில் மக்கள் பொங்கி விட்டனர்.

“சசிகலா என்ன போராட்டம் செய்து விட்டு சிறைக்குப் போனாரா, மக்கள் பிரச்சினைகளுக்காக கைதாகி சென்றாரா? என்ன தவ வாழ்க்கை வாழ்ந்தார்? இறந்தவர் ஏ1 குற்றவாளி என்றால், இவர் ஏ2தானே?” என்று சளைக்காமல் கேள்விகளை மக்கள் கேட்டனர். அதனால், இந்த சிறைவாசம் இனியும் சசிகலாவுக்கு கெட்ட பெயரைத்தான் உண்டு பண்ணும்.

இதேவேளை “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வர் ஆகவில்லை; அ.தி.மு.கவினரால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்” என்று கூறியுள்ளார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா.

“ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. சசிகலா அரசியலுக்கு வர வேண்டும்” என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

“சசிகலா அரசியலுக்கு வர வேண்டும். அது தவறில்லை என்பது என்னுடைய கருத்து. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்து அனைத்தையும் செய்தவர் சசிகலா” என்று பிரேமலதா தெவித்துள்ளார்.

“2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த தே.மு.தி.க 41 தொகுதிகளைப் பெற்று போட்டியிட்டது. அதே தொகுதிகளை எதிர்வரும் சட்டசபைத் தேர்தலிலும் எதிர்பார்க்கிறோம். கூட்டணி குறித்து காலதாமதமின்றி விரைவில் அறிவிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்களை விஜயகாந்த் வெளியிடுவார்” என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறையில் இருந்து நேற்று விடுதலையாகி இருக்கும் சூழலில், அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இருக்கும் சூழ்நிலையில் சசிசலாவிற்கு ஆதரவான கருத்துகளை பிரேமலதா கூறியுள்ளதால் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க, தே.மு.தி.க கூட்டணி நீடிக்குமா? கேட்ட 41 தொகுதிகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேசமயம், கட்சியை தன் பொறுப்பில் வைத்திருக்கும் ஆளுமை சசிகலாவுக்கு உள்ளது. ‘மாஸ்டர் பிளான்’ செய்பவர். அனைவரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்து செல்லக் கூடிய திறமை சசிகலாவுக்கு இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அந்த வகையில், அ.தி.மு.கவுக்கு இவர் பலம் என்றே சொல்லலாம். எனவே, சசிகலா வெளியே வந்துள்ளதால் என்ன வகையான அரசியலை கையில் எடுக்க போகிறார் என்பது உள்பட பல கேள்விகள் விடை தெரியாமல் நிற்கின்றன.

Related posts