முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் – நடிகை ராதிகா

நான் நடித்து வரும் சீரியல்கள் அனைத்திலிருந்தும் படிப்படியாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் என ராதிகா சரத்குமார் கூறி உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மண்டல செயலாளர் ஞானதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சசிகுமார், எஸ்.ஆர்.மணி, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் சிங்காரவேலன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். சரத்குமாரை தொடர்ந்து கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ராதிகா பேசியதாவது:-

தமிழகத்தில் கொரானா தொற்றால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தனர், அப்போது கட்சியின் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களுக்காக சேவையாற்றினர். அதேவேளையில் கட்சியின் தலைவரும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்காக சாதி, மதம் பாராமல் அனைவரும் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தமைக்காக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2021-ம் ஆண்டில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்த வேண்டும். 2 முக்கிய தலைவர்கள் இல்லாத நிலையில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும், வருகிற தேர்தலில் முழுமையாக ஈடுபட உள்ளேன்.

அதற்காக சின்னத்திரையில் நான் நடித்து வரும் சீரியல்கள் அனைத்திலிருந்தும் படிப்படியாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் இவ்வாறு அவர் பேசினார்.

சமத்துவ மக்கள் கட்சி தற்போது வரை அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது. அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னரே எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். நடைபெறவுள்ள தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்,

தற்போது அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நடிகர்கள் என்னைவிட அரசியல் வாழ்க்கையில் ஜூனியர்கள் தான், சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் பெண்களுக்கும் இடம் ஒதுக்கப்படும்,

அதன் முன்னோட்டமாக தான் வேளச்சேரி தொகுதி பொறுப்பாளராக கட்சியின் மகளிர் அணி செயலாளர் ராதிகாவை நியமித்து உள்ளேன். வருகின்ற தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற்று மக்கள் சேவை புரிய சமத்துவ மக்கள் கட்சி பாடுபடும்.

Related posts