ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள்..

ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை இன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர் ராஹ்மான் இன்று தனது 53- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை இன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இசைத்துறையில் ரஹ்மான் புகுத்திய புதுமைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

40-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நேரம் அது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஒரு 25 வயது இளைஞனுக்கு..அதுவும் தான் இசையமைத்த முதல் படத்திற்கு வழங்கப்படுகிறது. அப்படி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசை புயல் என்ற பெயர் கிடைத்ததில் ஆச்சர்யமில்லை. தேசிய விருதுக்கான இசையமைப்பாளரை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் தமிழ் இயக்குனர் பாலு மகேந்திராவும் இருந்தார்.

தேவர் மகன் படத்திற்காக இளையராஜாவுக்கா அல்லது ரோஜா படத்திற்காக ரஹ்மானுக்கா என தீர்மானிக்க வேண்டிய தருணம். மிகுந்த யோசனைக்கு பிறகு ரஹ்மானுக்கு தனது 2 வாக்குகளை வழங்கினார் பாலுமகேந்திரா. அதற்கு அவர் சொன்ன காரணம், ஒரு 25 வயது இளைஞன், தனது முதல் படத்திலேயே இளையராஜா போன்ற ஜாம்பவான்களுக்கு இணையான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறான். பிற்காலாத்தில் இந்த இளைஞன் எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் பெறலாம்.

ஆஸ்கர் கூட . ஆனால் இந்த விருது மிகவும் முக்கியம் என நினைத்ததால் தனது வாக்குகளை ரஹ்மானுக்கு வழங்கியிருக்கிறார் பாலுமகேந்திரா. அவரது கணிப்பு உண்மையானது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளி வந்தார் ரஹ்மான். ரோஜா படம் வந்தபோது, அதற்கு முன்பு வரை யாரும் கேட்டிராத வகையில், டிஜிட்டல் ஒலியை அறிமுகம் செய்து, ஒலியின் தரத்தில் ஒரு புதிய உச்சத்தை எட்டியிருந்தார் ரஹ்மான். அன்று முதல் இன்று வரை நிறைய புது புது ஒலிகளை தனது இசையில் கோர்ப்பது மட்டுமின்றி, பாடல்களை உருவாக்குவதிலும் தொடர்ச்சியாக புதுமையை கையாண்டு வருகிறார் ரஹ்மான்.

ரிதம் படத்தின் நதியே நதியே பாடல் முழுக்க தண்ணீரின் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும். வண்டுகளின் ரீங்காரம், மழை என பலவிதமான ஒலிகளை பயன்படுத்தியுள்ளார். பாடல்களுக்கு மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் இதை செய்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில், மொட்ட பாஸ் என தலையை தட்டும் போது வரும் ஒலியை பில்லியட்ஸ் விளையாட்டில் பயன்படுத்தும் பந்துகளை மேஜையில் கொட்டி ஒல்லிப்பதிவு செய்திருந்தார். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என விருப்பப்பட்ட ரஹ்மான், அந்த ஆசையை இசைத்துறையில் நிறைவேற்றிக்கொண்டார்.

அவர் பயன்படுத்திய மென்பொருட்கள், புது புது எலக்ட்ரானிக் கருவிகளை தான் அவருக்கு பின் வந்த இளம் இசையமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். ரஹ்மான் அறிமுகம் செய்த உன்னிக்கிருஷ்ணன் தனது முதல் படத்திலேயே சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றார். இந்த பிரிவில் ஒரு தமிழ் பாடல் தேசிய விருது பெற்றதும் இதுவே முதன் முறை. ஹரினி, சின்மயி, நரேஷ் ஐயர் என பல பாடகர்களை அறிமுகம் செய்துள்ளார். தற்போது இளைஞர்களின் ஃபேவரிட்டாக உள்ள சித் ஸ்ரீராமை அறிமுகம் செய்ததும் ரஹ்மான் தான். இப்படி பல புதுமைகளை செய்து , இன்றும் அனைவரது மனங்களையும் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார் இசைப்புயல்…..

Related posts