பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக காவ்யா நடித்துள்ள காட்சிகள் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இதில் முல்லை கதாபாத்திரம் மிகவும் பிரபலம். அதில் நடித்து வந்த சித்ரா, டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்டிஓ மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சித்ராவுடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணை விவரங்கள் எதுவுமே இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், சித்ராவின் மரணத்துக்குப் பிறகு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்த காவ்யா அறிவுமணி, முல்லையாக நடிக்க ஒப்பந்தமானார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பில் சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, காவ்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. ஆனால், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் சித்ரா நடித்திருந்த காட்சிகள் நேற்று (டிசம்பர் 22) வரை ஒளிபரப்பாகி வந்தன. இன்று (டிசம்பர் 23) முதல் முல்லையாக காவ்யா நடித்துள்ள காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ரசிகர்கள் மத்தியில் காவ்யாவின் நடிப்பு எடுபடுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Related posts