அமேசான் வெப் சீரிஸ் விஜய் சேதுபதி – மாளவிகா மோகனன்

அமேசான் வெப் சீரிஸில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கவுள்ளனர்.
மக்கள் மத்தியில் ஓடிடி தளங்கள் பிரபலமாகி வருகின்றன. இதனை இன்னும் அதிகப்படுத்த, பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களைப் போட்டி போட்டு ஓடிடி நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. தமிழில் ‘பூமி’ மற்றும் ‘டெடி’ ஆகிய படங்கள் நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு உறுதியாகியுள்ளன.
தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால், ஓடிடி நிறுவனங்கள் முன்னணி நடிகர்களைக் கொண்டு வெப் சீரிஸ்களை உருவாக்கக் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், அமேசான் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் ‘தி பேமிலி மேன்’. இதனை ராஜ் மற்று டிகே ஆகியோர் இயக்கியிருந்தனர். தற்போது ‘தி பேமிலி மேன் 2’ தயாரிப்பில் உள்ளது. இதில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்டமான வெப் சீரிஸ் ஒன்றை இயக்க ராஜ் மற்றும் டிகே ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் ஷாகித் கபூர் நாயகனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்த வெப் சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் தயாராகும் இந்தத் தொடரை இதர மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவுள்ளனர். இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படும்போது, அந்தெந்த மொழி நடிகர்கள் நடித்திருந்தால் பெரும் எதிர்பார்ப்பு நிலவும்.
இதனைத் திட்டமிட்டே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களைக் கொண்டு இந்த வெப் சீரிஸைத் தயாரிக்க அமேசான் ஓடிடி தளம் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

Related posts