ஹாலிவுட் திரைப்பட வாய்ப்பு நன்றி தெரிவித்த தனுஷ்

தான் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறித்து அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ள தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பாக ‘தி க்ரே மேன்’ என்கிற திரைப்படம் உருவாகிறது. இதில் ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை ஹாலிவுட் செய்தி இணையதளம் ஒன்றில் வெளியான இந்தத் தகவலை சிறிது நேரத்தில் நெட்ஃபிளிக்ஸும் உறுதி செய்தது. வியாழக்கிழமை இரவு முதலே தனுஷ் ரசிகர்களும், பிரபலங்கள் பலரும் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்துப் பகிர்ந்துள்ளார். ”ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் நடிக்கும், ரூஸோ சகோதரர்கள் (அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா) இயக்கும் நெட்ஃபிளிக்ஸின் ‘தி க்ரே மேன்’ குழுவோடு இணைகிறேன் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த அற்புதமான ஆக்‌ஷன் நிறைந்த அனுபவத்தில் பங்காற்றுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன். உலகம் முழுவதிலும் இருக்கும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு என் நன்றி. இவ்வளவு வருடங்களாக அவர்கள் காட்டி வரும் தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், அன்பைப் பரப்புங்கள். ஓம் நம சிவாய, அன்புடன் தனுஷ்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை நெட்ஃபிளிக்ஸ் தயாரித்த படங்களில் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக ‘க்ரே மேன்’ உருவாவது குறிப்பிடத்தக்கது.

Related posts