அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள் படத்தில் தனுஷ்..

மார்வல் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குநர்கள் அந்தோனி மற்றும் ஜோ இருவரும் சேர்ந்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’, ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’ மற்றும் ‘எண்ட் கேம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ. இவர்கள் ரூஸோ சகோதரர்கள் என்ற பெயரில் ஹாலிவுட்டில் பிரபலமானவர்கள் மார்வல் சூப்பர்ஹீரோ படங்களில் ‘இனிஃபினிடி சாகா’ என்று சொல்லப்படும் முதல் மூன்று கட்டங்களைச் சேர்ந்த திரைப்படங்களில் முக்கியமான நான்கு திரைப்படங்களை இயக்கியவர்கள் ரூஸோ சகோதரர்கள். இதில் கடைசியாக இவர்கள் இயக்கிய ‘எண்ட் கேம்’, உலகத் திரைப்பட வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படம் என்கிற சாதனையைப் படைத்தது.
இதைத் தொடர்ந்து, ‘தார்’ கதாபாத்திரத்தில் நடித்த க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் நாயகனாக நடித்த ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’ என்கிற திரைப்படத்துக்கு ஜோ ரூஸோ திரைக்கதை எழுதியிருந்தார். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. இதன் பின் ‘செர்ரி’ என்கிற திரைப்படத்தை இருவரும் தயாரித்து இயக்கி வருகின்றனர். இந்தப் படம் அடுத்த வருடம் ஆப்பிள் டிவி+ வெளியீடாக வெளியாகிறது.
இதன் பிறகு ‘தி க்ரே மேன்’ என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஒரு திரைப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் ‘கேப்டன் அமெரிக்கா’வாக நடித்த க்றிஸ் ஈவான்ஸும், ‘லா லா லேண்ட்’, ‘ஃபர்ஸ்ட் மேன்’ ஆகிய படங்களின் நாயகன் ரயன் காஸ்லிங்கும் நடிக்கின்றனர்.
மேலும் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை டெட்லைன் என்கிற பிரபலமான ஹாலிவுட் செய்தி இணையதளம் பகிர்ந்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தரப்பும் இதை தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

Related posts