டி.வி. நடிகை சித்ரா வழக்கில் கணவர் கைது ஏன் …?

டி.வி. நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் நேற்று கைது செய்யப்பட்டார்.

பிரபல டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண் டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்ன திரையை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத்க்கும் பதிவு திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத் விடுதிக்கு வெளியில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது. கணவர் ஹேம்நாத் சித்ராவிடம் சண்டை போட்டு விடுதி அறையை விட்டு வெளியே போன பிறகு சித்ரா தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. இன்று விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே ஹேமந்த் பலமுறை குடித்துவிட்டு சித்ராவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று சண்டையிட்டு உள்ளார் என்பது விசாரணையில் அம்பலமானது. தற்போது போலீஸ் விசாரணையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஹேமந்த் சித்ரா மீது சந்தேகம் அடைந்ததாகவும், அதுகுறித்து அவருடன் சண்டை போட்டுள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை எல்லாம் அடிப்படையாக கொண்டே ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related posts