தனுஷ் – ராம்குமார் இணையும் ‘வால் நட்சத்திரம்’?

ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கு ‘வால் நட்சத்திரம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘கர்ணன்’ படத்தை முடித்துவிட்டு, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் இந்திப் படமான ‘அந்தரங்கி ரே’வில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
கார்த்திக் நரேன் படம் தவிர்த்து, ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தையும் சத்யஜோதி நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது. தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.
முழுக்க கிராபிக்ஸ் பின்னணியில் உருவாகும் படம் என்பதால், அனைத்தையும் திட்டமிட்டுவிட்டு, பின்பு படப்பிடிப்புக்குச் செல்லப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘வால் நட்சத்திரம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராம்குமார் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் முன்பு, கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படம், மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள படம் ஆகியவற்றை முடிக்கத் திட்டமிட்டுள்ளார் தனுஷ்.

Related posts