டிசம்பரில் அடுத்த படத்தைத் தொடங்கும் வெற்றிமாறன்

டிசம்பரில் சூரி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
‘அசுரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ள படத்தை இயக்க ஒப்பந்தமானார் வெற்றிமாறன். ஆனால், அதற்கு முன்னதாகவே சூரியை வைத்து ஒரு படம் இயக்கத் திட்டமிட்டார். ஆகையால், முதலில் எல்ரெட் குமார் தயாரிக்கும் படமா, சூரி நடிக்கும் படமா என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
இறுதியாக சூரி நடிக்கும் படத்தை வெற்றிமாறனே இயக்கி, தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுதான் சென்னை திரும்புவதற்குப் படக்குழு முடிவு செய்துள்ளது.
சூரி படத்தை முடித்துவிட்டு, எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதில் மீண்டும் தனுஷை இயக்கவுள்ளார். இதற்காக தனுஷ் எப்போது தேதிகள் ஒதுக்கியுள்ளார் என்பதில் தெளிவில்லாமல் உள்ளது.
தனுஷ் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுதான், தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

Related posts