இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் அயலான்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
24 ஏ.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘அயலான்’. ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்தார். பைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.
இறுதியில், இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இடையே, நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘டாக்டர்’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். இதையும் கே.ஜே.ஆர் நிறுவனமே தயாரித்து வந்தது.
தற்போது ‘டாக்டர்’ படத்துக்கு ஒரே ஒரு பாடலைத் தவிர, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இதனால், ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. இதில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
‘அயலான்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Related posts