படம் ஓடும் திரையரங்குகளை எரிப்போம்

‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் வரலாற்று உண்மைகளைச் சிதைத்து வெளியிட்டால், படம் ஓடும் திரையரங்குகளை எரிப்போம் எனத் தெலங்கானா மாநில பாஜக தலைவரும், கரீம்நகர் எம்.பி.யுமான பந்தி சஞ்சய் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கோமரம் பீம் கதாபாத்திரத்தின் முன்னோட்டக் காணொலி வெளியானது. இதில் ஒரு காட்சியில் பீம் கதாபாத்திரம், இஸ்லாமியரைப் போல உடை அணிந்து நடப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இதற்குத்தான் சஞ்சய் குமார் தற்போது மிரட்டல் விடுத்துள்ளார்.
ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சஞ்சய் குமார், “பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்று கோமரம் பீம் தலையில் ராஜமௌலி குல்லா அணிவித்தால் நாங்கள் அமைதியாக இருப்போமா? கண்டிப்பாக மாட்டோம். கோமரம் பீமைக் குறைவாக மதிப்பிட்டோ, ஆதிவாசிகளின் உரிமைகளை, உணர்வுகளைத் தாழ்த்தியோ படத்தை எடுப்பீர்களானால் உங்களைக் கம்பு கொண்டு அடிப்போம். திரையரங்கில் படத்தை அப்படி வெளியிட்டால் படம் ஓடும் ஒவ்வொரு திரையரங்கையும் எரிப்போம்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மேலும், ”ராஜமௌலிக்குத் தைரியம் இருந்தால் ஏதாவது இஸ்லாமியத் தலைவரையோ, நிஜாம் ஆட்சியிலிருந்த ஒரு நவாப்பையோ நெற்றியில் திலகத்தோடு, காவி உடை அணிய வைத்துத் திரைப்படம் எடுக்க முடியுமா?” என்று சஞ்சய் குமார் கேட்டுள்ளார்.
கோமரம் பீம், அல்லூரி சீதாராம ராஜு ஆகிய உண்மையான போராளிகளின் கதாபாத்திரங்கள் இருந்தாலும், இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருந்திருக்கும் என்கிற கற்பனையே ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் என இயக்குநர் ராஜமௌலி ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts