சிம்புவுக்கு நன்றி சொன்னார், ஹன்சிகா..

சிம்புவும், ஹன்சிகா மோத்வானியும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் இருவரும் மனம்விட்டுப் பேசி, பிரிந்து விட்டார்கள். என்றாலும் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள்.

ஹன்சிகா நடித்து திரைக்கு வர இருக்கும் ‘மஹா’ அவர் நடித்துள்ள 50-வது படம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படம், இது. இதில், சிம்பு கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். ஹன்சிகா கேட்டுக்கொண்டதன் பேரில், சிம்பு இந்த படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.

மஹா படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், மஹா படத்தில் நடித்ததற்காக சிம்புவுக்கு ஹன்சிகா நன்றி தெரிவித்து இருக்கிறார். டைரக்டர் யு.ஆர்.ஜமீல், தயாரிப்பாளர்கள் மதியழகன், அப்துல் மாலிக், முகமது சுபைதார் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

“படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததில், மொத்த படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். வருகிற கோடை விருந்தாக, ‘மஹா’ படத்தை திரைக்கு கொண்டுவர ஆவலாக இருக்கிறோம். இந்த படத்தில் ஒரு பாத்திரமாக பங்கு கொள்ள ஒப்புக்கொண்ட சிம்புவுக்கு பெரிய நன்றி. படத்தில் அவர் வரும் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என்று ஹன்சிகா கூறினார்.

Related posts