தனுஷுக்கு நாயகியாக ஒப்பந்தம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘அத்ரங்கி ரே’, ‘கர்ணன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இந்தப் படங்களை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 43-வது படமாகும். கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் படத்தின் 3 பாடல்களை உருவாக்கி முடித்துவிட்டது படக்குழு. இந்நிலையில், படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்தது.
அதன்படி, தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்துள்ளனர். விஜய்க்கு நாயகியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து தனுஷுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த ஜூலை 28-ம் தேதி அன்று தனுஷ் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக, “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ் சார். அற்புதமான ஆண்டு வரவிருக்கிறது. உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன். விரைவில் யாரேனும் நம் இருவரையும் ஒரே படத்துக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
தற்போது மாளவிகாவின் ஆசை உடனடியாக நிறைவேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts