சூப்பர் குட் பிலிம்சின் 90-வது படம் ‘களத்தில் சந்திப்போம்’

ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் சூப்பர் குட் பிலிம்சின் 90-வது படம் ‘களத்தில் சந்திப்போம்’ தீபாவளிக்கு வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் சாதனை புரிந்த பட நிறுவனங்களில், ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்சும் ஒன்று. இந்த பட நிறுவனம் தயாரித்த முதல் படம், ‘புதுவசந்தம்.’ அதில் முரளி, சார்லி, சித்தாரா உள்பட பலர் நடித்து இருந்தார்கள். பிரபல இயக்குனர்களில் ஒருவரான விக்ரமன், ‘புது வசந்தம்’ படத்தின் மூலம்தான் டைரக்டராக அறிமுகமானார்.

விஜய், அஜித், சரத்குமார் போன்ற கதாநாயகர்களை, நட்சத்திர கதாநாயகர்களாக உயர்த்தியது, இந்த பட நிறுவனம்தான் என்று சொன்னால், அது மிகையாகாது. நடிகர்களைப்போல் பல டைரக்டர்களின் அந்தஸ்தையும் இந்த பட நிறுவனம் உயர்த்தியது.

இதுவரை 89 படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ், தனது 90-வது தயாரிப்பாக, ‘களத்தில் சந்திப்போம்’ என்ற படத்தை அறிவித்து இருக்கிறது. இதில் ஜீவா, அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம், இது.

கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். காரைக்குடி செட்டியாராக, ‘அப்பச்சி’ என்ற மாறுபட்ட வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். பாலசரவணன், இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், மாரிமுத்து, ரேணுகா மற்றும் பலரும் நடிக்கிறார்கள். ‘பிசாசு’ பட புகழ் பிரக்யா, கவுரவ வேடத்தில் வருகிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்.ராஜ சேகர் டைரக்டு செய்கிறார். தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வர இருக்கிறது.

Related posts