உன்னதத்தின் ஆறுதல் ! வாரம் 20. 42

உதவியற்ற வேளையிலும் அரவணைக்கும் தேவன்.
சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியங்கள் . டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

ஆகிலும், நீர் வந்து உமது கையை வையும் அப்போது அவள் பிழைப்பாள். மத்தேயு 9:18.
இன்று மக்கள் தங்கள் சுயமுயற்சியினால் எதையும் அடைந்து கொள்ளலாம் என்று வாழ்ந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது அதேநேரம் சகலதும் தேவனால் ஆகும் என்று தேவனைச் சார்ந்து வாழ்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. மேலே நாம் வாசித்த வேதப்பகுதியில், ஒரு ஜெபஆலயத்தலைவனின் மகள் சுகவீனம் அடைந்து மரிக்கும் வரையிலும் அவன் வைத்திய உதவியை நாடியிருந்தான். மரித்த பிற்பாடு அவன் இயேசுவை நாடினான். இயேசு அவனின் வேதனையை அறிந்து அவனின் மகளை மீண்டும் உயிர்ப்பித்து, அவனின் வேதனையை நீக்கினார். இந்த உண்மையை அறிய கீழ்வரும் வேதப்பகுதியை நாம் தியானத்துடன் வாசிப்போம்.

அப்பொழுது ஜெபஆலயத் தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், தன்வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கி னார்கள். அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத் தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி, உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான். இயேசு அதைக்கேட்டு, பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.

அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வர வொட்டாமல், எல்லாரும் அழுது அவளைக் குறித்துத் துக்கங் கொண்டாடுகிறதைக் கண்டு, அழாதேயுங்கள், அவள் மரித்துப் போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அவள் மரித்துப் போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து, பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள், அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளை யிட்டார். அவள் தாய் தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். லூக்கா 8:41-56.

இந்த சம்பவத்தை நாம் அவதானிக்கும்போது, அந்த ஜெபஆலயத் தலைவனுடைய சூழ்நிலையையும், செயற்பாட்டையும் மிகத்தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். அவன் தனது மகள் மரிக்குந்தறுவாய் மட்டும் அவன் தேவனைத் தேடவில்லை. அவன் தேவனைத் தேடியபோது மகள் மரித்து விட்டாள். அத்துடன் அவனின் உறவினர்கள் இனித் தேவனைத்தேடி எந்தவித பிரயோசனமும் இல்லை. இயேசுவை வருத்தப்படுத்த வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் இரக்கமுள்ள இயேசு தகப்பனின் வேதனையைப்புரிந்தவராக, மகள் மரிக்கும்வரை இருந்துவிட்டு இப்போது என்னை வரும்படி வருத்துவது என்ன என்று கேட்காமல் அவன் வீட்டிற்கு சென்று மகளின் கையைத்தொட்டு எழுந்திரு என்றார். உடனே அவள் எழுந்திருந்தாள்.

எமக்கும் இந்த யாவீருக்கும் என்ன வேறுபாடு உள்ளது? சற்று நாம் சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும். சிறிதோ பெரிதோ எந்தக் காரியத்திற்கும் நாம் ஆண்டவரிடம் போவதில்லை. அது நமக்கு பழக்கமில்லை. நமது சொந்த பலத்திலும், சொந்த முயற்சியிலும் தங்கியிருக்க விரும்புகிறோம். நிலைமை மோசமாக வந்த பிற்பாடு அவசரப்பட்டு தேவனிடம் தயவைநாடி செல்கிறோம். ஆனாலும் நமது ஆண்டவர் இரக்கமுள்ளவர் மட்டுமல்ல இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர். காலம் கடந்தாலும் குற்றம் சொல்லாதவர். மனதுருகி இரக்கம் செய்யும் தேவன் என்பதை இப்போது உணர்ந்திருப்பீர்கள்.

தேவபிள்ளையே, நம்மை நாமே அறியாத ஓர் சூழ்நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது தேவை இன்னது, நமக்கு இருக்கும் குறைகள் இன்னது என்று நாம் அறியாமல் ஓர் மாயமான திருப்தியில் நாம் வாழ்ந்து வருகிறேதாம். ஆனால் எந்த நிலைமையில் நாம் வாழ்ந்தாலும் நம்மை அறிந்தவராக, ஓர் தேவன் இருக்கிறார் என்பதைமட்டும் நீ ஒரு நாளும் மறவாதே. திருப்தி என்கிறதான போலி வாழ்வை விட்டு ஆண்டவனிடம் வா.

அவர் உன்குறைவுகளை நிறைவாக்கி, உன்னை மகிழ்ச்சியுடன் வாழவழி செய்வார். உன்வாழ்வில்; தேவனின் நாமம் மகிமைப்படும்போது, நீ மாத்திரமல்ல, உன்குடும்பமும், உன்சந்ததியும் ஆசீர்வதிக்கப்படும். தமக்குள் குறைவுகளோடு இருப்பவர்களும் இயேசுவிடம் தைரியமாக வந்து ஆறுதலைப் பெறுவார்கள். இது எத்தனை சந்தோசம் தெரியுமா!

வசனம் 49,53ஐ நாம் வாசித்துப்பார்த்தால் இந்த உண்மையை உணரமுடியும். அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி, உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான். அவள் மரித்துப் போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அந்த ஜெப ஆலயத்தலைவன் கீழ்வரும் உண்மையை அறிந்திருந்தான்.

யோவான் 11:25 இயேசு அவளை நோக்கி, நானே உயிர்த்தெழுதலும் ஜீவனு மாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடி ருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா? என்றார். அதனால் இயேசுவிடம் சென்று தனது குறையை நீக்கும்படி மன்றாடினான். இயேசு அவனது வேதனையை நீக்கி அவனை ஆறுதல் படுத்தினார். அதுமட்டுமல்ல. கூடஇருந்தவர்களும் அற்புதத்தைக்கண்டு, ஆச்சரியப் பட்டு அவர்மேல் விசுவாசம் வைத்தனர்.

அதே இயேசு இன்று உனக்குள்ள குறைகளை நீக்கி, உனக்கு அற்புதம் செய்து, உன்னை ஆசீர்வதித்து வாழவைக்க விரும்புகிறார். அவரிடம் உன்னை ஒப்புக் கொடுத்து, உன்குறைகளை அறிக்கைபண்ணி, நீயும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்.

அன்பின் இயேசு சுவாமி இன்று உமது இரக்கத்தையும், மனதுருக்கத்தையும் அறியக்கூடிய சூழ்நிலையை எனக்கு உருவாக்கித் தந்தமைக்காக உமக்கு நன்றி அப்பா. நானும் உம்மேல் விசுவாசம் வைத்து, எனது குறைவுகளை உம்மிடம் அறிக்கையிட்டு, முற்று முழுக்க விடுதலை பெற்று, உமக்குள் புது வாழ்வு பெற்று மகிழ்ச்சியுடன் வாழ, வழி செய்யும் பிதாவே ஆமேன்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts