என் உயிருள்ளவரை எஸ்பிபியை உள்ளத்தில் வைத்திருப்பேன்

உயிருள்ளவரை உள்ளத்தில் எஸ்பிபி சாரை வைத்திருப்பேன் என்று கலங்கியபடியே கார்த்தி பேசினார்
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று (செப்டம்பர் 30) எஸ்பிபி-யின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்து கொண்டு எஸ்பிபி பற்றி தங்களுடைய நினைவஞ்சலியைப் பகிர்ந்து வருகிறார்கள். அந்தக் கூட்டத்தில் கார்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:
“எஸ்பிபி சாரைப் பற்றி என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லுவானா என்று தெரியவில்லை. சில பேர் மக்களுடைய வாழ்க்கையைச் சந்தோஷப்படுத்துவதற்காகவும், துணையாக இருப்பதற்காகவும் படைக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் எஸ்பிபி சாருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்தேன் என்பதால் அவர்கூடவே வளர்ந்திருக்கிறேன். எனக்கு அவர் இயற்கை மாதிரி தான். வானம், பூமி, காற்று மாதிரி தான் எஸ்பிபி சார். அந்தளவுக்கு எனக்குள் இருப்பவர் எஸ்பிபி சார்.
பல நாட்கள் அவருடைய பாடல்கள் கேட்டுத்தான் தூங்கியிருக்கிறோம். இப்போது என் பெண்ணும் அவருடைய பாட்டுக் கேட்டுத்தான் தூங்குகிறாள். ஒவ்வொருவரிடமும் பேசும் போது, அவர் இல்லை என்ற சோகம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. அது ஆறவே ஆறாது என நினைக்கிறேன். அவருடைய பாடல்களை இப்போது கேட்கும் போதும், பேசிய விஷயங்களைப் பார்க்கும் போது அவருடைய குரலை விட அவ்வளவு இனிமையாக வாழ்ந்திருக்கிறார்.
என்னுடைய பாக்கியம் கடந்தாண்டு என் படத்தில் ஒரு பாடல் பாடினார். அப்போது அந்த ஸ்டுடியோவில் சாதாரண ஒரு மனிதரைக் கூட அவர் கடந்து போகவில்லை. எப்படியிருக்க என்று கேட்டுப் பேசினார். ஒவ்வொருத்தரையும் அவ்வளவு நேசிக்க முடியுமா என்று தெரியவில்லை. எஸ்பிபி சாரிடமிருந்து சக மனிதரை நேசிக்கும் பழக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். எஸ்பிபி சார் வி ஆல்வேஸ் மிஸ் யூ. என் உயிருள்ளவரை என் உள்ளத்தில் உங்களை வைத்திருப்பேன்”
இவ்வாறு கார்த்தி கலங்கியபடியே பேசினார்.

—–

இன்று (செப்டம்பர் 30) எஸ்பிபி-யின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்து கொண்டு எஸ்பிபி பற்றி தங்களுடைய நினைவஞ்சலியைப் பகிர்ந்து வருகிறார்கள். இந்தக் கூட்டத்தில் கங்கை அமரன் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் பேசிய வீடியோ பதிவு திரையிடப்பட்டது. அதில் அவர் பேசியதாவது:
“எஸ்பிபி போவதற்கு 4 நாட்களுக்கு முன்பே எனக்கு ஆரம்பிச்சுடுச்சு. என்னமோ நடக்கப் போகுதே என்ற உணர்வு. அவர் இறந்துவிட்டார் என்று சொன்னதிலிருந்து பிடித்தது தான். எஸ்பிபிக்கு நெருங்கிய நண்பன் என்பதை எல்லாம் கடந்து பிரம்மாண்டமான ஆள். எவ்வளவு சாதனை செய்த ஒரு ஆள். ரொம்ப எளிமையாக நடந்து கொள்ளக் கூடிய ஒரு மனிதர். அவர் இல்லை என்பதை என்னால் தாங்க முடியவில்லை.
நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்லிக் கொண்டாலும், தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் வீட்டில் இருப்பவர்கள் இங்கு தானே வருவார், உட்காருவார் என்று நினைப்பீர்கள். அதனால் உங்களுக்கு எல்லாம் எப்படி ஆறுதல் சொல்லுவது எனத் தெரியவில்லை. தயவு செய்து அதிலிருந்து மீண்டு வாருங்கள். என் அண்ணன் கூட என் மீது அவ்வளவு ஆசை வைக்கவில்லை. அவ்வளவு ஆசை வைத்திருந்த என் நல்ல நண்பனை இழந்து அவ்வளவு வருத்தப்படுகிறேன்.
நானே இவ்வளவு வருத்தப்படும் போது, அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும். நாங்கள் எப்படியாவது தேறி வந்துவிடுவோம். குடும்பத்தினர் தினமும் பதறாமல் இருங்கள். ஆறுதல் அடையுங்கள். நம்ம கூடவே தான் இருப்பான் பாலு. பகல் எல்லாம் அவனுடைய நினைப்பாகவே இருந்தேன். இரவு எல்லாம் தூக்கம் வராமல் அழுது கொண்டிருந்தேன்.
ஒரு குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு கனவில் வருவார்கள் என்று சொல்வார்கள். அந்தக் கனவு வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதிலாவது அவனைப் பார்க்கலாமே என்று. அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள். நானும் ஆறுதல் ஆயிடுறேன்.. ஆயிடுறேன்… ஆயிடும்… ஆயிடும். என் நண்பனை இழந்துவிட்டேனே. அவர் உயிருடன் பக்கத்திலேயே இருப்பது போல் நினையுங்கள்”
இவ்வாறு கங்கை அமரன் கண்ணீருடன் பேசினார்.

——-

“எஸ்பிபி சாரை ரொம்ப பெர்சனலாக தெரியாது. என் படங்களுக்கு 2 பாடல்கள் பாடியிருக்கிறார். அந்தளவுக்குத் தான் தெரியும். ஆனால், எஸ்பிபி சார் வந்து தென்னிந்தியாவின் 4 தலைமுறைகளுக்குக் குரலாக மட்டுமின்றி எல்லாமாக இருந்திருக்கிறார். அநிச்சயாக செய்யக்கூடிய செயல்கள் போல, அவருடைய குரல் இசையும் நம்மோடு கவனிக்காமலேயே இருந்திருக்கிறது.
கடந்த 2 மாதமாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் உன்னிப்பாகக் கவனிக்கும் போது அவர் எவ்வளவு இருக்கிறது என்பது தெரிகிறது. எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருப்பது என்னவென்றால், இந்த டிஜிட்டல் உலகத்தில் அவர் இல்லையென்றால், தொடர்ச்சியாக அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பது போல் தான் இருக்கிறது. எஸ்பிபி இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததிலிருந்து அவருடைய பாடல்கள், பேச்சுகள் எனப் பார்க்கிறோம்.
எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது எந்தவொரு தயக்கம் இல்லாமல் பாராட்டு மனது. அவரது ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போது எவ்வளவு நேர்மறையாக இருந்துள்ளார் என்பது தெரிகிறது. எஸ்பிபி சார் ஏதோ ஒரு வழியில் நம்முடன் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார். எஸ்பிபி அவர்களிடமிருந்து நாம் நேர்மறை எண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
நாம் எளிமையாக இருக்கப் பயிற்சி எடுக்கிறோம். அவர் இயல்பிலேயே அப்படித்தான் இருந்திருக்கிறார். அவர் போல் அன்பையும், பாராட்டையும் வேறு யாரும் கொடுக்க முடியாது என நினைக்கிறேன். அன்பும், மன்னிப்பும் மட்டுமே தான் எஸ்பிபி என நினைக்கிறேன். அது தான் அவருடைய கலையாகவும் இருந்திருக்கிறது என நினைக்கிறேன். எஸ்பிபியின் ஆளுமை மற்றும் குரல் நம்மைக் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”
இவ்வாறு இயக்குநர் வெற்றிமாறன் பேசினார்

Related posts