செல்போனில் படமாக்கப்பட்ட ஃபஹத் பாசிலின் ‘சி யு சூன்’

ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் ‘சி யு சூன்’. மகேஷ் நாராயண் இயக்கியுள்ள இப்படத்தில் ரோஷன் மேத்யூஸ், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஊரடங்கு காலகட்டத்தில் முழுக்க முழுக்க செல்போனில் படமாக்கப்பட்ட இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தை ஃபஹத் பாசிலே தயாரிக்கவும் செய்துள்ளார்.
இப்படம் குறித்து ஃபஹத் பாசில் கூறும்போது, ”இயக்குநர் மகேஷ் நாராயணுடன் பணிபுரிவது என்பது எப்போதுமே ஒரு அற்புதமான அனுபவம். இதற்கு முன் ‘டேக்-ஆஃப்’ படத்தில் நாங்கள் இணைந்திருந்ததும் அப்படியான ஒரு அனுபவம். அதே போலவே ‘சி யு சூன்’ படத்துக்கும் அமைந்தது” என்றார்.
‘சி யு சூன்’ படம் குறித்து இயக்குநர் மகேஷ் நாராயண் கூறியிருப்பதாவது:
” ‘சி யு சூன்’ கணினி திரையை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர் திரைப்படம். இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சி. இந்தக் காலகட்டத்தில் மக்கள் இணையத்தோடு இணைந்திருக்கவே விரும்புகின்றனர். இதை ஒரு கதைக்களமாக எடுத்துக்கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்பினோம்.
மெய்நிகர் தொலைத்தொடர்பு மென்பொருள் மற்றும் அதன் வடிவமைப்பாளர்கள் இல்லாமல் இப்படம் உருவாகியிருக்க முடியாது”.
இவ்வாறு இயக்குநர் மகேஷ் நாராயண் கூறினார்.

Related posts