குருநாகல் மாவட்ட அபிவிருத்தி குறித்து பிரதமரின் ஆலோசனை

யாபஹூவ, பண்டுவஸ்நுவர மற்றும் குருநாகல் ஆகிய இடங்களை சுற்றுலா தலங்களாக அபிவிருத்தி செய்வது தொடர்பான ஆலோசனைகளை சுற்றுலாத்துறை அமைச்சருக்கு முன்வைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22) தெரிவித்தார்.

குருநாகல், மொரகொல்லாகம, சியம்பலன்கமுவவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மஹவ, பொல்பித்திகம கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் காணப்படும் பௌதீக பிரச்சினைகளை விரைவாக கண்டறிந்து அதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் அவர்களுக்கு பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.

கும்புக்கடவல வீதி மற்றும் காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட தலாகல கிராமத்திற்கு செல்லும் வீதி ஆகியவற்றை விரைந்து அபிவிருத்தி செய்யுமாறு தெரிவித்த பிரதமர், மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கவும், காணிப் பிரச்சினையை தீர்த்து சியம்பலன்கமுவ வைத்தியசாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த ஹிரியாகல ஹத்பத்துவே தலைமை நீதிமன்ற சங்கநாயக்கர் திஹவ கஸ்ஸன் தளுபொத மற்றும் நாகொல்ல ரஜமஹா விகாரைகளின் தலைமை விகாராதிபதி கனேகொட ரதனஜோதி தேரர் அனுசாசனம் நிகழ்த்தினர்.

ஐக்கிய தேசிய கட்சி வெளிநாட்டு நலன்களுக்கு ஏற்ப செயல்படும்போது, அதிலிருந்து வெளியேறிய டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க இலங்கை சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தமையை நினைவுகூர்ந்த ரதனஜோதி தேரர், பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் வேலைத்திட்டங்களுக்கு அவரது பிள்ளைகளின் ஆதரவே கிட்டாத நிலையில், பெலியத்த பகுதியினுடாக பாராளுமன்றத்திற்கு தெரிவான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கட்சியை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டமைiயும் நினைவுகூர்ந்தார்.

1988ஃ89 காலப்பகுதியில் அப்போதைய அரசாங்கம் இடதுசாரி அரசியல்வாதிகளை படுகொலை செய்தபோது, அதற்கு எதிராக குரல் எழுப்பிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்துவதற்கு மக்களுக்கு தலைமைத்துவம் வழங்கியிருந்ததாக கூறினார்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு நாட்டு மக்கள் கோரியபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரரை பாதுகாப்புச் செயலாளராக நியமித்ததன் மூலம் போரின் வெற்றியை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தார் என்றும், அவரது தலைமையின் கீழேயே வடக்கு மற்றும் கிழக்கு உட்பட முழு நாடும் அபிவிருத்தியை நோக்கி முன்னேற முடிந்தது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

சந்திரிகா, ரணில், சம்பிக்க, மங்கள மற்றும் ராஜித ஆகியோர் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து ஸ்ரீ.சு.க. செயலாளரை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி கட்சியிலிருந்து வெளியேற்றி ஐக்கிய தேசிய கட்சியை வேறாக்கியதாகவும், அன்று தோல்வியடைந்து மெதமுலனைக்கு சென்ற மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் நாட்டின் தலைமைக்கு வருமாறு மக்கள் அழைத்ததாகவும் தேரர் குறிப்பிட்டார்.

மக்கள் அத்தகைய வேண்டுகோளை விடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், ராஜபக்ஷர்களை வீதிகள் வீதிகள் தோறும் நடக்கவைக்க வேண்டும் என ராஜித போன்றோர் குறிப்பிட்டதாக நினைவுபடுத்தி ரதனஜோதி தேரர், ஆனால் அதற்கு மக்கள் இடமளிக்கவில்லை என தெரிவித்தார். நல்லாட்சியின் காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்டது என்றும் மத்தல விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தி குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டது என்றும் எப்.சி.ஐ.டி. அமைத்து ராஜபக்ஷர்களை அரசியலிலிருந்து வெளியேற்ற சதித் தீட்டிக் கொண்டிருந்த வேளையிலேயே ஜனாதிபதி தேர்தல் வந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒரு நல்ல தலைமைத்துவத்தை வழங்குமாறு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரினர். அவர் தனது சகோதரரை அழைத்து நாட்டை பொறுப்பேற்குமாறு கூறினார். அதற்கு நாட்டின் 69 இலட்சம் என்ற பெரும்பான்மை மக்கள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டனர்.

கடந்த பொதுத் தேர்தலில் 5 இலட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றுக்கொடுத்து மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இந்த குருநாகல் பிரதேச மக்கள் பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர். நீங்கள் கோரிய பலத்தை மக்கள் உங்களுக்கு வழங்கியுள்ளனர். தற்போது நாட்டு மக்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஹிரியாகல ஹத்பத்துவே தலைமை நீதிமன்ற சங்கநாயக்கர் திஹவ கஸ்ஸன் தளுபொத தேரர் மற்றும் நாகொல்ல ரஜமஹா விகாரைகளின் தலைமை விகாராதிபதி கனேகொட ரதனஜோதி தேரர் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

——

மஹாசங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு மத்தியிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22) தெரிவித்தார்.

வடமேல் மாகாண மஹாசங்க கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குருநாகல் மாவட்ட வேட்பாளராக களமிறங்கிய தனக்கு கடந்த பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு குருநாகல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலுமுள்ள மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் செய்த அர்ப்பணிப்பிற்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்தார்.

அதேபோன்று நாட்டின் எதிர்கால திட்டங்களை மஹாசங்கத்தின் ஆலோசனை மற்றும் அறிவுரையின் பேரில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாகக் கூறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாக நடத்துவதிலும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

வடமேல் மாகாணத்தில் காணப்படும் நீர் பிரச்சினை, காட்டு யானைகளின் பிரச்சினை மற்றும் பிற அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து ஆராந்து, மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் பிரதமர் கூறினார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் வடமேல் மாகாணத்தின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Related posts