விக்னேஸ்வரன் எம்.பியின் உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும்

இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் விக்னேஸ்வரன் உரையாற்றியுள்ளாரென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திற்குள் நுழையும்போது விக்னேஸ்வரன் இலங்கையின் இறைமையை காப்பாற்றுவதற்கான சத்தியப்பிரமாணம் எடுத்தார். ஆனால் தனது உரையில் நாட்டை பிளவுபடுத்தும் கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளாரென மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்கினேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையை ஹன்சார்டிலிருந்து முற்றாக நீக்க வேண்டுமென அவர் நேற்று சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மனுஷ நாணயக்காரவின் கோரிக்கைக்கு பதிலளித்தார்.

நேற்றைய சபை அமர்வில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய மனுஷ நாணயக்கார,

இந்நாட்டில் தனி இராச்சியமொன்றை நிறுவுவதற்கோ, அவ்வாறான முயற்சிக்கு ஒத்துழைப்பு மற்றும் நிதி பங்களிப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோமென்று இந்த சபையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.

ஆனால், போர் முடிவடைந்து, பூர்வீக கோட்பாடு உள்ளிட்ட விடயங்கள் எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு அனைரையும் இலங்கையராக ஏற்கும் நிலைக்கு முழு நாடும் வந்துள்ள நிலையில் இந்த பாராளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றியுள்ளார்.

இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ் என்று இந்த பாராளுமன்றத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறான கருத்து ஹென்சாட்டில் இடம்பெறுவது தவறு.

சிலருக்கு தனிப்பட்ட ரீதியில் சில நிலைப்பாடுகள் இருக்கலாம். இந்நாட்டின் பூர்வீக குடிமக்கள் யார், மொழி எது? என தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், அவ்வாறான கருத்து இலங்கை பாராளுமன்றத்தின் ஹென்சாட்டில் இடம்பெறுவது தவறு.

எனவே, ஹென்சாட்டிலிருந்து இக்கருத்தை நீக்குமாறு கோருகின்றேன்.” -என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Related posts