பாலு எழுந்துவா உனக்காக காத்திருக்கிறேன் இளையராஜா

பாலு எழுந்துவா உனக்காக காத்திருக்கிறேன் என இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.
பின்னணி பாடகரும், இசையமைப்பாளரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறி, மீண்டு வர வேண்டும் என, பலரும் வேண்டியுள்ளனர்.
இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், நமது வாழ்வு வெறும் சினிமாவுடன் முடிந்து போவதும் அல்ல, சினிமாவுடன் தொடங்கியதும் அல்ல. எங்கேயோ மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த இசை நிகழ்ச்சி நமது வாழ்வாகவும், வாழ்வாதாரமாகவும் அமைந்தது. அந்த கச்சேரிகளில் ஆரம்பித்த நமது நட்பும் இசையும் பிரிந்ததில்லை.
எப்படி ஸ்வரங்கள் பிரியாது இருக்கிறதோ அது போல நமது நட்பும் எந்த காலத்திலும் பிரிந்ததில்லை. நாம் சண்டை பேட்டாலும் சண்டையில்லாத போதும் அது நட்பே என நீயும் அறிவாய், நானும் அறிவேன். நீ நிச்சயமாக திரும்பி வருவாய் என என் உள்ளுணர்வு சொல்கிறது. அது நிஜமாக நடக்கட்டும் என கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா.. என பேசியுள்ளார்.
கொரோனாவில் இருந்து, எஸ்.பி.பி., மீண்டு வர வேண்டும் என, திரையுலகினர் இறைவனை வேண்டியுள்ளனர்.
இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘இசைப் பிரியர்கள் அனைவரும், எஸ்.பி.பி.,க்காக வேண்டிக் கொள்ளுங்கள்’ என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.இசையமைப்பாளர்கள் அனிருத், தேவி ஸ்ரீபிரசாத், ரஜினி மகள் சவுந்தர்யா உள்ளிட்ட பலரும், எஸ்.பி.பி., மீண்டு வர வேண்டும் என, இறைவனை வேண்டியுள்ளனர்.

Related posts