தமிழர்கள் துணைபோக மாட்டார்கள் !

எல்லாக் காலங்களிலும் அபிவிருத்திகள் நடந்துகொண்டு தான் வருகின்றது. வெறுமனே அபிவிருத்திக்காக ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பது எந்தவிதத்திலும் அறிவுபூர்வமான விடயம் அல்ல. எங்களுடைய தேசியத்தை பெருந்தேசியத்திற்கு அடகு வைத்து எங்களது இருப்பை இலதாக்குகின்ற செயற்பாட்டுக்கு எமது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், வேட்பாளருமாகிய கி. துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இறுதி பிரச்சார நடவடிக்கைகளின் போதே இவ்வாறான கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அபிவிருத்தியை ஆளும் கட்சியில் இருந்தால் தான் கொண்டு வரலாம் என்று சொல்லுகின்றார்கள். இது முற்றிலுமே பிழையான விளக்கம். நாட்டு மக்களிடம் இருந்து அரசு வரிப்பணங்களை எடுத்துக் கொள்கின்றது நாட்டு மக்களைப் பரிபாலிப்பதற்காக. இந்த முழு நாட்டுக்குமாகத் தான் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

இலங்கை முழுதும் பங்கீடு செய்யப்படுகின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் நமக்கும் கிடைக்கும். இதற்கு ஆளும்கட்சியில் ஒருவர் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிலே அபிவிருத்தி செய்யப்பட்டு தான் ஆக வேண்டும்.

அதற்கு மேலான சில அபிவிருத்தித் திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் திட்டங்களை முன்வைத்து செய்வார்கள். இதுதான் யதார்த்தம். ஆனால், அவ்வாறு செய்யாமல் அரசாங்கள் தங்கள் முகவர்கள் மூலம் அபிவிருத்தி செய்ததன் காரணமாகத் தான் இந்த மாயை ஏற்பட்டிருக்கின்றது.

தமிழரசுக் கட்சி இருந்த காலத்தில் இங்கு அபிவிருத்தி நடந்தது, தமிழர் விடுதலைக் கூட்டணி இருந்த காலத்திலும் இங்கு அபிவிருத்தி நடந்தது. தமிழ்த் தேசியக் கூட்மைப்பு இருக்கின்ற காலத்திலும் இங்கு அபிவிருத்தி நடந்து கொண்டுதான் வருகின்றது. எனவே, அபிவிருத்திக்காக ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பது எந்தவிதத்திலும் அறிவுபூர்வமான விடயம் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

எங்களுடைய தேசியத்தை இந்தப் பெருந்தேசியத்திற்கு அடகு வைத்து எங்களது இருப்பை இலதாக்குகின்ற செயற்பாட்டுக்கு எமது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள். தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கங்களுடன் புரிந்துணர்வுடன் இருந்த காலங்களில் தான் தமிழ் மக்கள் கஷ்டங்கள் குறைந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் எல்லாக் காலத்திலும் ஒருசில தமிழ்ப் பிரதிநிதிகள் அரசுடன் சேர்ந்திருந்தார்கள்.

1958, 1961, 1977, 1981, 1983 ஆகிய காலப்பகுதிகளில் எல்லாம் தமிழ்ப் பிரதிநிதிகள் அரசுடன் இருந்தார்கள். அப்போதெல்லாம் என்ன நடைபெற்றது. இந்த ஆண்டுகளில் எல்லாம் தென் பகுதியில் இருந்து தமிழர்கள் மிகவும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு தென்பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். அப்போது விமானங்கள், கப்பல்கள் மூலம் அவர்களை வடக்கு கிழக்கில் தான் குடியமர்த்தினார்கள். இதிலிருந்து வடக்கு கிழக்கு தான் தமிழர்களின் தாயகம் என்பதை அரசுகளும் செயற்பாட்டின் மூலம் காட்டியிருக்கின்றன. இந்தக் காலங்களிலெல்லாம் அரசாங்கங்களோடு இருந்த தமிழ்ப் பிரதிநிதிகளால் இவற்றைத் தடுக்க முடிந்ததா? முடியவில்லை அவர்கள் வாய் மூடி மௌனிகளாகவே இருந்தார்கள்.

குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போதும், தரப்படுத்தல் சட்டம் வந்தபோதும், எமது நிலத்தைக் கபளீகரம் செய்கின்ற குடியேற்றங்கள் வந்தபோதும், அண்மையில் இனப்படுகொலை நடந்த போதும் தட்டிக் கேட்டது தமிழரசுக் கட்சியின் பரிநாம வளர்ச்சி கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் தான்.

நாம் எல்லாம் ஒரு விடுதலை நோக்கிப் போராடுகின்றவர்கள். சம்பந்தன் ஐயா சொல்வதை வைத்து கேலி செய்கின்றார்கள். அடுத்த பொங்கல் அடுத்த தீபாவளியில் தீர்வு வரும் என்று. ஆம் நம்பிக்கை ஒன்றை மட்டுமே பலமாகக் கொண்டு முன்நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். விவசாயிகள் பலமான விளைச்சல் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் விதைக்கின்றார்கள். ஆனால் மழை, வெள்ளம், யானை, பன்றி போன்ற தடைகள் வருகின்றது. இதனால் நாங்கள் நினைத்த அறுவடை வரவில்லை தான் ஆனால் முற்றுமுழுதாக நட்டப்படவும் இல்லை.

இந்த 70 ஆண்டுகால விடுதலை வரலாற்றிலே நாங்கள் பல அடைவுகளை எய்தியிருக்கின்றோம். ஆனால் எம்முடைய இலக்கை அடைவதற்காக இன்னும் போராடுகின்றோம். அதற்கான ஏற்பாடுகளை கடந்த 2015 இல் ஆரம்பித்தோம். ஜனாதிபதியின் அதிகாரம் முழுமையாக இருந்தால் எமது சமஷ்டி தொடர்பிலான அரசியலமைப்பினை முன்நகர்த்துவது கடினம் என்பதற்காகவே 19 வது திருதத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்தோம். பின்னர் 2018 இல் எம்மால் கொண்டு வரப்பட்ட 19 வது திருத்தத்தின் ஜனநாயகத்தையே காப்பாற்றினோம்.

வட அயர்லாந்து, வேல்ஸ், தென்சூடான், கிழக்குத் தீமோர், கொசோவா, கெடலோனியோ, சோவியா ஆகிய நாட்டு மக்களும் அந்த அந்த நாட்டு பெரும்பான்மையுடன் தங்கள் இருப்பைத் தக்க வைப்பதற்காகப் போராடின பல நூறு ஆண்டுகளுக்கு மேலாகவும் அப்போராட்டங்கள் நடைபெற்றன. போராடி அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற்றார்கள். ஆனால், அவர்கள் சுதாந்திரத்தைச் சோற்றுக் கிண்ணங்களிலே பெறவில்லை.

தற்போது திருகோணமரைலயிலே அவர்கள் கைவைத்திருக்கின்றார்கள். இவ்வாறு செயற்பட்ட ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்கள், பௌத்த பிக்குகள் திருகோணமலை, வேற்றுச்சேனை, கல்வெட்டியமலை, குசலானன்மலைக்கும் சென்றார்கள். எங்கே கொண்டு போகப் போகின்றார்கள் இந்த மொட்டு, படகு தோழர்கள் நம்மை என்று எமது மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

Related posts