முதலில் ‘வாடிவாசல்’; பின்பு ‘அருவா’: சூர்யா முடிவு

முதலில் ‘வாடிவாசல்’ படத்தில் தான் சூர்யா கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்று தணிக்கையும் செய்யப்பட்டுவிட்டது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் வெளியாகும் முதல் படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் சூர்யா. ஆனால், ரஜினி – சிவா கூட்டணி முடிவானதால், சூர்யா – சிவா கூட்டணி திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘அருவா’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் சூர்யா.
அந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்து தீபாவளிக்கு வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டது. நடிகர்கள் ஒப்பந்தமும் மும்முரமாக நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டப்படி படப்பிடிப்பு தொடங்க முடியவில்லை. இதற்கிடையே, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் சூர்யா. தாணு தயாரிக்கவுள்ளார்.
ஒரே சமயத்தில் ஹரி – வெற்றிமாறன் இருவரின் படங்களிலும் மாறி மாறி நடிக்க திட்டமிட்டார். ஆனால், நிலைமை இப்போது மாறியுள்ளது. என்னவென்றால் முதலில் வெற்றிமாறன் படத்தை முழுமையாக முடித்துவிட்டு, ஹரி படத்துக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார் சூர்யா. வெற்றிமாறன் படத்துக்கு நிறைய முன்தயாரிப்பு தேவைப்படுவதால் இந்த முடிவை சூர்யா எடுத்துள்ளதாக தெரிகிறது.

Related posts