பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி

பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா மீது வீண் பழிசுமத்துகிறது என இந்திய தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரின் பங்குச்சந்தை அலுவலகத்தில் நேற்று காரில் வந்த 4 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸார், பொதுமக்கள் என 7 பேர் பலியானார்கள். பாதுகாப்பு படையினரால் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கராச்சியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் சிலீப்பர் செல்கள்தான் இந்தத் தாக்குதலைச்செய்துள்ளார்கள் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்மூத் குரேஷி குற்றஞ்சாட்டினார்.

இதற்கு இந்தியத் தரப்பில் பாகிஸ்தானுக்குக் கடும் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று அளித்த பேட்டியில் பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானைப் போல் அல்ல இந்தியா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கராச்சியில் மட்டுமல்ல உலகில் தீவிரவாதச் செயல் எங்கு நடந்தாலும் அதைக் கண்டிக்க இந்தியா தயங்காது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இதுபோல் பொறுப்பற்ற ரீதியில் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. இதை கடுமையாக இந்தியா மறுக்கிறது.

உலக அளவில் தீவிரவாதி என்று அறியப்பட்ட அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனைத் தியாகி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் புகழ்ந்தார் என்பதை குரேஷி மறந்துவிடக்கூடாது. பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா மீது வீண் பழிசுமத்துகிறது என கூறினார்

Related posts