உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 23

இதுதான் தேவனின் வழி.

சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண் (பாதுகாப்பு.) அக்கிரமக்காரருக்கோ (கீழ்ப்படியாதவர்களுக்கோ) கலக்கம். நீதிமொழி 10.29.

இதை வாசிக்கும் நேயர்களில் பலர் என்ன நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நான் அறியாவிட்டாலும் ஒன்று நிச்சயம். வாழ்க்கையில் சலனத்திலும், குழப்பத்திலும் அல்லது ஏதும் ஒரு குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்பது உண்மை. மனித உள்ளத்தில் ஏதோவொரு புரிந்துகொள்ள முடியாத போராட்டம் நிறைந்த உணர்வு மக்களை இன்றும் தாக்கியபடிதான் உள்ளது. (இலங்கை தமிழர்களின் நிலையை நாம் சற்று சிந்திப்போம்) மனிதகுலம் துக்கத்தோடும் குழப்பத்தோடும் வாழ வேண்டும் என்று தேவன் மனிதர்களை படைக்கவில்லை. அல்லது தவிப்போடும் தடுமாற்றத் தோடும் வாழ வேண்டும் என்றா தேவன் விரும்புகிறார்? இல்லவே இல்லை.

நீங்கள் இலகுவாக புரிந்து கொள்ளும்படியாக தொலைக்காட்சியில் பார்த்த ஓர் உண்மைச் சம்பவத்தை கற்பனைகளுடன் சேர்த்து, தேவனின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளும்படியாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். (இது சீனாவில் நடந்தது) கடவுள்மேல் பக்திவைராக்கியம் உள்ள ஒருவர் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். திடீரென கடும் மழை பெய்தது. கிராமத்தவர்கள் பலர் அவரிடம் சென்று பெரியவரே மழைவெள்ளம் அதிகரிக்கும் நாம் வேறு கிராமத்திற்குப் போய் தப்பித்துக் கொள்வோம் என பல தடவைகள் வேண்டிக் கொண்டனர்.

அவரோ கடவுள் என்னைக் காத்துக் கொள்வார் என பலவிசுவாச வார்த்தைகளால் மக்களுக்கு பதில் அளித்து தப்பித்துப்போக மறுத்து விட்டார். படகுகளில் ஒரு சிலர் வந்து காப்பாற்ற முயற்சித்தனர். அவர் இணங்கவில்லை. வெள்ளம் உயர உயர அவரும் வீட்டின் மேலுள்ள உயர்ந்த பகுதிகளுக்கு ஏறினார். இறுதியாக வெள்ளம் அதிகரித்தபடியால் வீட்டின் கூரைக்கு ஏறினார். இதனை அவதானித்த வான்படையினர் வானூர்தியிலிருந்து கயிற்றை விட்டு அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். அதற்கும் அவர் மறுத்து விட்டார். கடவுள் என்னை காப்பாற்றுவார், நான் இவர்கள் மூலம் தப்பித்தால் எனது பக்திவைராக்கியம், விசுவாசத்தைக் குறித்து மக்கள் கேலி செய்வார்கள் என நினைத்து சகல உதவிகளையும் நிராகரித்துவிட்hர். இறுதியாக வீடு பெருவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயர் இழந்தார்.

இறந்தவர் கடவுளிடம், நான் இவ்வளவு அதிகமாக உம்மை நம்பி அன்பு வைத்து விசுவசித்தேன். ஏன் எனது விடையத்தில் வாக்குமாறினீர் என்று கேட்டாராம். அதற்கு கடவுள், நான் வாக்குமாறாதவர் உனது விடையத்திலும் அப்படித்தான். நான் கிராமத்தவர்கள் மூலம் உன்னை காப்பாற்ற முயன்றேன், நீ கீழ்படியவில்லை. படகுகின்மூலம் முயன்றேன் கீழ்ப்படியவில்லை. வானூர்திமூலம் முயன்றேன் நீ கீழ்ப்படியவில்லை. நான் என்ன செய்வேன் என்றாராம்.

இப்படித்தான் நாமும் பலமுறைகளில் தேவனை சோதித்துப் பார்க்கிறோம். அல்லது தப்புக்கணக்கு போடுகிறோம். அந்த பெரியவர் கடவுளை நம்பினது தவறா? அவரின்மேல் வைக்கும் விசுவாசம் பொய்யா? இரண்டுமேயில்லை. அப்போ தவறு எங்கே? அன்று வெள்ளம் வற்றிப்போய் அல்லது, தான் எண்ணியபடி விசுவாசித்தபடி கடவுள் தன்னை காப்பாற்றினார் என்று சொல்லியிருக்க முடியும். கிராமத்தவர்களோ, படகோ, வானூர்தியோ காப்பாற்ற வந்தபோதும், தான் எண்ணியபடி அற்புதமான முறையில் ஒன்றும் நடவாதபடியால், அவரால் எதனையும் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.

கர்த்தராகிய தேவன் அற்புதம் செய்வார். அதற்காக அவர் நூதனமான தேவன் அல்ல. காக்கும் தெய்வம் காப்பார். அதற்காக நாம் விரும்பும் வழியில்தான் நம்மை காப்பாற்ற வேண்டுமா? தேவனின் வாக்குறுதிகள் உண்மையும் சத்தியமுமானவைகள். அதற்காக நாம் நினைத்தபடி எம்முடன் இருக்க வேண்டும் என நினைப்பது சரியா?

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், தேவனால் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு வந்தவர்கள் தேவனைவிட்டு, அவரின் பாதுகாப்பை வழிநடத்தலை உதாசீனம் செய்து தமது வழிகளில் போனார்கள். தேவன் அவர்களுக்கு எரேமியா தீர்க்கதரிசி மூலம் ஓர் எச்சரிப்பை விடுத்தார். பாபிலோன் யூதாவிற்கு எதிராக வரும். அவனை நானே எழுப்புவேன். அவன் வந்து நகரத்தை பாளாக்குவான். அவன் கையில் ராஜாவையும் மக்களையும் நானே ஒப்புக்கொடுப்பேன் என்று சொன்ன கர்த்தர், பாபிலோனிலே 70 வருட சிறை இருப்பையும் அறிவித்தார். இதை ஏற்றுக்கொள்ள கடினமாகத்தான் அன்று அவர்களுக்கு இருந்திருக்கும்.

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள நம் தேவன் அவர்களுக்கு வரக்கூடிய அழிவிலிருந்து தப்பித்துக ;கொள்ள ஒரு வழியையும் அவர்கள் முன்வைத்தார். அதாவது, பாபிலோன் வரும்போது முரண் பிடிக்காமல் கர்த்தரால் நியமிக்கப்பட்ட தண்டனையும் சிட்சை யுமான அந்த சிறையிருப்புக்குள் மக்கள் இணங்கிப்போக வேண்டும் என்பதே அந்த வழி. அதை விட்டுவிட்டு நான் போகமாட்டேன் இதுதான் என் சொந்த பூமி பாபிலோன் பிறஜாதிகளின் தேசம் என்று முரண் பிடித்தால் (எச்சரிக்கை) இந்த நகரத்தில் தரிக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்iநோயாலும் சாவான். உங்களை முற்றுபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப் போய்விடுகிறவனோ பிழைப்பான். அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப் பொருளைப்போல் இருக்கும். எரேமியா 21:9. இதுதான் தேவனின் வழி.

இன்று நமது பிரட்சனை என்ன என்பது விளங்குகிறதா? கர்த்தருடைய வழி என் வழியாக இருக்க வேண்டும் என்பதை சற்றேனும் நினையாமல் என்வழி கர்த்தருடைய வழி என்பதுபோல நாம் வாழ்கிறோம். கடவுளின் நினைவின்படியல்ல, என் நினைவு களின்படி கடவுள் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது வேண்டுதல் களும், விண்ணப்பங்களும் அதே பிரகாரமாகத்தான் இருக்கிறது.

நமது பிரட்சனைகளையும் முறையிட்டு அதிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய வழியையும் கடவுளுக்கு நாமே கற்பித்து தெரியப்படுத்தி அதன்படி நடக்க கடவுளையே அழைக்கின்ற அளவிற்கு நாமே கதாநாயகர்களாக எண்ணுகிறோம் என்பதுதான் இன்றைய உண்மை. நான் கேட்டேன் கடவுள் செய்தார் என்பதுதான் அநேகருடைய சாட்சியாக, வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கிறது.

ஆம், உண்மைதான். கர்த்தர் தமது பிள்ளைகளின் விருப்பத்தைக் கேட்பார். இரங்குவார். கேட்டபடியும் செய்வார். அது அவருடைய சுத்த கிருபை. மாறாக நாம் சொல்ல அவர் கேட்க அவர் நமது வேலையாள் அல்ல என்பதை நம்மில் பலர் அறியவில்லை. அவர் கர்த்தர். அவர் ராஜரீகம் செய்கிறவர். அவருடைய வழிகள் உயர்ந்தவைகள். அவர் நம்மை தப்புவிப்பது சத்தியம். ஆனால் நாம் நினைக்கும் வழியில் அல்ல. அவர் வழிகள் உயர்ந்தவைகள்.

இப்பொழுது புரிந்திருப்பீர்கள் தேவனின் வழியையும் செயல்களையும். அந்த வழியில் நடக்க உங்களை ஒப்புக்கொடுத்து அமைதியான ஆறுதலான வாழ்வு வாழ என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஒப்புக்கொடு.

அன்பான இயேசு சுவாமி, இன்று உமது வழிக்கும் மானிட வழிக்கும் உள்ள வேறுபாட்டையும், அதன் முடிவையும் குறித்து அறிய உதவியதற்காக நன்றி அப்பா. இதுவரை காலமும் அந்த வழியையும் முடிவையும் தெரியாமல் வாழ்ந்து வந்து விட்டேன். அதற்காக என்னை மன்னித்து இன்றிலிருந்து உமது வழியில் என்னை நடத்தி காத்துக் கொள்ளும்படியயாக இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark.

Related posts