அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் சூர்யா

அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் சூர்யா – கார்த்தி நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தவறானது என்று ரீமேக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்துள்ள இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றப் பலரும் போட்டியிட்டனர். இறுதியாக தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன.
சரத்குமார் – சசிகுமார், சசிகுமார் – ஆர்யா என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தப் படத்தில் சசிகுமார் நடிப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது. இதனிடையே, சூர்யா- கார்த்தி முதலில் இணைந்து நடிக்கும் படமாக ‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக் இருக்கும் என்று முன்னணி இணையதளங்கள் பலவும் செய்திகள் வெளியிட்டிருந்தன.
இது தொடர்பாக விசாரித்த போது, “சூர்யா – கார்த்தி இருவரிடமும் இது தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையுமே நடைபெறவில்லை. இந்தச் செய்தியில் உண்மையில்லை” என்று தெரிவித்தார்கள்.
இதற்கிடையே படக்குழுவினரோ யார் இயக்குநர், யார் நடிகர் என்பது உள்ளிட்ட எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை. அனைத்து நடிகர்களும் முடிவானவுடன் அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related posts