கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களில் தொற்று ஏற்படுமா?

கொரோனா வைரஸ் தொற்று தாக்கி மனிதர்களுக்கு நேரிடுகிற இறப்புகளில் எழுகிற கேள்விகளையும், அவற்றுக்கான பதில்களையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர். விளக்கமாக வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்கள் உடல்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழ்வது படிப்படியாக குறைகிறது. இருப்பினும் ஒரு உடல், தொற்று இல்லாத உடல் என அறிவிப்பதற்கு இப்போது காலவரையறை எதுவும் இல்லை.

எனவே இறந்தவர்களின் உடல்களைக் கையாள்கிறபோது தேவையான முன் எச்சரிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ‘நான்இன்வேசிவ்’ முறையில் செய்கிற பிரேத பரிசோதனை முறையை பின்பற்றுவது நல்லது.

கொரோனா வைரஸ் சந்தேகத்துக்கு இடமானவரின் இறந்த உடலில் பிரேத பரிசோதனை செய்கிறபோது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்ன என்று கேட்டால், முதலில் இறந்தவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இறந்ததாகத்தான் கருத வேண்டும். எனவே தொற்றுநோய் பரவி வரும் காலம் வரையிலும், ‘நான் இன்வேசிவ்’ பிரேத பரிசோதனை முறையை பின்பற்ற வேண்டும்.

ஒரு சதவீதம் ஹைப்போ குளோரைடு அல்லது 70 சதவீதம் ஆல்கஹால் திரவத்தை பயன்படுத்தி உடல்மேற்பரப்பை கிருமி நீக்கம் செய்த பின்னர் ‘இன்வேசிவ்’ முறையில் பிரேத பரிசோதனை செய்ய முடியுமா என்ற கேள்வி எழலாம்.

நாசி மற்றும் வாய்வழி துவாரங்கள் வழியாக வாயுக்கள் அல்லது திரவங்கள் இயற்கையான சுற்றுவட்டங்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றன. போக்குவரத்தின்போது ஏற்படக்கூடிய துவாரங்களின் சுருக்கம் நோய் பரவும் ஆதாரங்களாக இருக்கலாம். எனவே கொரோனா வைரஸ் மேற்பரப்பு கிருமி நீக்கம், கொரோனா வைரசுக்கு எதிராக பாதுகாப்பை வழங்காது.

உடலை கையாள்பவர்களுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளதா என்று கேட்டால், சரியான சுய பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொள்கிறபோது அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

பொதுவாக கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறக்கிறவர்களின் உடல்களை பிணவறைக்கு மாற்றுவதற்கென தனியாக ஊழியர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால், ஆஸ்பத்திரி அதிகாரிகளால் உடலை கொண்டு செல்ல கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படவேண்டும். எந்தவொரு ஆள் பற்றாக்குறை பிரச்சினையையும் தீர்க்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நலத்துறையின் உதவியைப் பெறலாம்.

கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்ட அல்லது சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற ஒருவர், இயற்கைக்கு மாறான விதத்தில் இறந்து விட்டால், இறப்பு குறித்த சான்றிதழை வழங்குவதில் போலீஸ் துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் மற்றும் உடலை உட்புற பிளவு இல்லாமல் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts