அலைகள் வாராந்த பழமொழிகள் 09.05.2020

01. உங்கள் சிந்தனைதான் உங்களை உருவாக்குகிறது. நீங்கள் உற்சாகமாக உணர்ந்தால் மட்டுமே உங்களால் உற்சாகமாக இருக்க முடியும்.

02. உங்கள் உற்சாகம் மற்றவரையும் தொற்றிக்கொள்ளும்.. அப்போதுதான் அவர்கள் உயர்ந்த தரத்தோடு செயற்படுவார்.

03. நாம் நம்முடைய வேலையை குறைவாக மதிப்பிட்டால் நம்மோடு பணியாற்றுவோர் அதைவிட தாழ்வாக மதிப்பிடுவார்.

04. உங்கள் வேலை குறித்து எப்போதும் நேர்மறையான கருத்தை வெளியிடுங்கள். நான் தகுதி வாய்ந்த ஆளா..? எனது செயல் என் கீழ் வேலை செய்வோருக்கு மகிழ்ச்சி தருமா என்று உங்களை நீங்களே கேளுங்கள்.

05. மற்றவருடன் பேசும் முன் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி எண்ணங்களை மனதில் நிறுத்திய பின் பேசுங்கள். உங்கள் உள்ளம் உங்கள் குரலில் தெரியும்.

06. பேசுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாக உங்கள் மனதில் ஓடியது என்ன.. உங்களை நீங்களே கேளுங்கள். அது சோகமாகவும், தோல்வியாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு. அப்படியாயின் அதை உடன் மாற்றுக.

07. நான் தோற்றுவிடுவேன் என்ற எண்ணத்துடன் பேசினால் கண்டிப்பாக உங்களுக்கு தோல்வியே பரிசாகக் கிடைக்கும்.

08. தினமும் ஒன்றுக்கு பல தடவைகள் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

09. உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நீங்களே உற்சாகமூட்டும் சுய புகழ்ச்சியை பழகிக் கொள்ளுங்கள்.

10. உங்களை நீங்கள் உயர்வாக மதிக்க வேண்டும், இல்லையேல் மற்றவர்கள் உங்களை உயர்வாக மதிக்கமாட்டார்கள். பலர் நடைப்பிணங்களாக வாழ்கிறார்கள் அவர்களிடம் சுயமரியாதை இல்லாமலிருப்பதே அதற்குக் காரணம்.

11. நேற்று நீ ஒரு சிறந்த மனிதனாக இருந்தாய், இன்று அதைவிட சிறந்த மனிதனாக இருக்கப்போகிறாய், நாளை மேலும் உயர்வாய் என்று கூறிக்கொள்ளுங்கள்.

12. உங்களுடைய மிகச்சிறந்த பண்பு நலங்கள் எவை என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களைப்பற்றி விபரிக்க வெட்கப்பட வேண்டாம்.

13. உங்களைப்பற்றி புகழாக எழுதி அதை காலை தோறும் படிக்கத் தவற வேண்டாம்.

14. இப்படி முறைப்படுத்தப்பட்ட சிந்தனையில் இருந்துதான் வெற்றி வருகிறது. மற்றவர்களுக்கு இது விளங்காது சிரிக்கலாம். அதுபற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்.

15. எந்தவொரு முடிவை எடுக்கும்போதும் ஒரு முக்கியமான மனிதர் இப்படியா செயற்படுவார் என்று உங்களை நீங்களே கேளுங்கள்.

16. உங்கள் தோற்றம் மற்றவர்களிடம் பேசுகிறது. இவர் ஒரு முக்கிய நபர் அறிவார்ந்தவர் என்று மற்றவர்கள் உங்களைப் பார்த்து நம்புவார்களா என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்.

17. இப்படி சிந்தித்தால் உங்கள் வேலைகளை நல்லபடியாக செய்யும் மன சமிக்ஞைகள் உங்களுக்கு தானாகக் கிடைக்கும்.

18. வாழ்வின் முக்கியமான தருணத்தில் ஒரு பெரிய தலைவர் இப்படியா சிந்திப்பார் என்று யோசித்துப் பார்க்கவும். அதன் பின் சின்ன சின்ன எண்ணங்களை மாற்றுக.

19. உங்கள் மனம் ஒர்; அற்புதமான இயந்திரம். அது ஒரு குறிப்பிட்ட நேர்மறையான விதத்தில் இயங்கும் போது நிகரற்ற வெற்றியை நோக்கி உங்களை அழைத்து செல்லும்.

20. அதே மனம் நீங்கள் உற்சாகம் இழந்தால் உடனடியாகவே உங்களை தோற்கடித்துவிடும்.

21. உடலுக்கு எப்படி ஆரோக்கிய உணவு வழங்குகிறோமோ அப்படி மனதிற்கும் அடிக்கடி ஆரோக்கிய உற்சாகம் வழங்க வேண்டும்.

22. எதிர்காலத்தில் நமது திறமை பெற வேண்டிய வெற்றியின் உச்சம் மனதாலேயே தீர்மானமாகிறது. ஆகவே மனதை எப்போதும் உற்சாகமாகன வைத்திருக்கவும்.

23. நீங்கள் முன்னேறிய நாட்டில், முன்னேறிய இனமாக பிறந்திருந்தால் இப்படியா இருப்பீர்கள் என்று யோசித்துப் பார்க்கவும்.

24. நமது சூழலே நம்மை தீர்மானிக்கின்றபடியால் எதிர்மறையாக சிந்திக்கும் மக்களுடன் இணைய வேண்டாம்.

25. நமது மனதிற்கு வழங்கும் ஆரோக்கியமான கற்பனைகளே எதிர்கால சூழலை உருவாக்குகிறது. இதைப்படித்தவுடன் வெற்றி மனிதராக மாறுங்கள். வாழ்க.

அலைகள் பழமொழிகள் 09.05.2020

Related posts