சந்திரமுகி 2-ம் பாகத்தில் ஜோதிகா நடிப்பாரா?

சந்திரமுகி 2-ம் பாகத்தில் ஜோதிகா நடிப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்தார். ஏற்கனவே சந்திரமுகி மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் ‘மணிசித்ரத்தாளூ’, கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன், சவுந்தர்யா நடிக்க ‘ஆப்தமித்ரா’ ஆகிய பெயர்களில் வந்து வெற்றி பெற்றன. அதன்பிறகு தமிழில் ‘சந்திரமுகி’ பெயரில் ரீமேக் ஆனது.

தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. சந்திரமுகி படத்தில் மனோதத்துவ மருத்துவராக வரும் ரஜினிகாந்த், பிளாஷ்பேக்கில் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக நடித்து இருந்தார். அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி, ஜோதிகா உடலுக்குள் ஆவியாக புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதையை அமைத்து இருந்தனர். படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது.

இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும், வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார். சந்திரமுகியாக நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அந்த கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவே பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது. எனவே அவரை இரட்டை வேடத்தில் உருவாக்கி ஒரு கதாபாத்திரத்தை சந்திரமுகியாக மாற்றி, அதில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதில் ஜோதிகா நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை.

Related posts