அஜித் – விஜய் ரசிகர்களின் தரம் தாழ்ந்த பதிவுகள்

ட்விட்டரில் அதிகரித்து வரும் அஜித் – விஜய் ரசிகர்களின் தரம் தாழ்ந்த பதிவுகளைச் சாடியுள்ளார் நடிகர் விவேக்
கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், ஊரடங்கு இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
இதனைப் பயன்படுத்தி பல்வேறு தொலைக்காட்சிகளும் புதிய படங்களையும் ஒளிபரப்பி தங்களுடைய டி.ஆர்.பியை உயர்த்தி வருகிறார்கள். இதில் விஜய் – அஜித் படங்கள் திரையிடும் போதெல்லாம் ட்விட்டர் தளத்தில் ஹேஷ்டேக் போட்டி நடைபெற்று வருகிறது.
கரோனா அச்சுறுத்தலிலும் விஜய் – அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் போட்டி ட்விட்டர் பயனர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனிடையே, விஜய் – அஜித் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு இருக்கும் சூழலும் அதிகரித்து வருகிறது.
இந்தப் பதிவுகள் தொடர்பாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நண்பர்கள் அஜித், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறைப் பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மீறிச் செய்தால் ப்ளாக் ஆகும். நேர்மறைப் பதிவுகளுக்கே நான் ட்விட்டரைப் பயன்படுத்துகிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்”.
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.

Related posts