அமேசான் ப்ரைமில் வெளியாகிறது ‘பாரஸைட்’

உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற ‘பாரஸைட்’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் தென் கொரியப் படமான ‘பாரஸைட்’ கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 4 ஆஸ்கர் விருதுகள், கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றது.

சமூக ஏற்றத்தாழ்வை சிறப்பான முறையில் படமாக்கியிருந்த இயக்குநர் பாங் ஜூன் ஹோவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்தன.

இந்நிலையில் இப்படம் வெளியான 2 மாதங்களுக்குப் பிறகு அமேசான் ப்ரைமில் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் இப்படத்தை கொரிய மொழியில் மட்டுமின்றி இந்தி டப்பிங்கிலும் பார்க்க முடியும். இப்படத்துக்கான ஆங்கில் சப்டைட்டிலும் இடம்பெறவுள்ளது.

‘பாரஸைட்’ படம் அமேசான் ப்ரைமில் வெளியாவது குறித்த உலகப் பட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related posts