மகிந்த தலைமையில் ‘காபந்து’ அரசாங்கம்..!

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 4 1/2வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் பாராளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் வரை காபந்து அரசாங்கமே செயற்படவுள்ளது. அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டால் தவிர எக்காரணம் கொண்டும் பாராளுமன்றம் கூட்டப்படாதென பிரதி பாராளுமன்ற செயலாளர் நீல் இத்தவெல தினகரனுக்கு தெரிவித்தார். பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகின்ற போதும் 19ஆவது திருத்தத்திற்கு அமைய 4 1/2வருடங்களின் பின்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.

இதற்கமைய நேற்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டதோடு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மார்ச் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமென வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

4 1/2வருடங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான 60ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தமது ஓய்வூதியத்தை இழப்பதோடு இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளும் இரத்தாகிறது. பிரதமர் அடங்கலாக அமைச்சரவை அந்தஸ்துள்ள 16பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த அரசாங்கம் பதவியேற்கும் வரை ‘காபந்து’ (இடைக்கால) அரசாங்கமாக செயற்படும் என தேர்தல் ஆணையாளர் சமன் ரத்னாயக்க கூறினார்.

பாராளுமன்றம் கலைவதுடன் அதன் சகல செயற்பாடுகளும் நிறைவுக்கு வருவதுடன் அரசியலமைப்பு பேரவை மாத்திரம் இயங்கும் எனவும் பிரதி பாராளுமன்ற செயலாளர் குறிப்பிட்டார்.

சபாநாயகர், பிரதி சபாநாயகர் ஆகியோரின் பதவிகளும் முடிவுக்கு வரும் நிலையில் அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் என்ற வகையில் சபாநாயகர் கூட்டங்களில் பங்கேற்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 155(4) பிரிவிற்கமைய அவசரகால சட்டம் அமுலில் இருந்தால் மாத்திரம் அதனை நீடிப்பதற்காக ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கூட்ட முடியும். தற்பொழுது அவசரகால சட்டம் அமுலில் இல்லாத நிலையில் அதற்கான தேவையும் ஏற்படவில்லை என உதவித் தேர்தல் ஆணையாளர் டிக்கிரி ஜெயதிலக தினகரனுக்கு குறிப்பிட்டார். வர்த்தமானியில் ஜனாதிபதி அறிவிக்கும் அடுத்த திகதியிலே மீண்டும் பாராளுமன்றம் கூடும் எனவும் அவர் கூறினார்.

இறுதியாக கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றம் கூடியதோடு இன்று வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதே வேளை 2019வாக்காளர் இடாப்பின் பிரகாரம் இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதுடன் ஒரு கோடி 62இலட்சத்து 63,885பேர் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்னர். தேர்தலுக்கு 550கோடி ரூபா வரை செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னரே கட்சிகள் தேர்தல் ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. பொதுஜன பெரமுன தலைமையில் புதிய கூட்டணி ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளதோடு சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கான ஒப்பந்தமும் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

இதில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்துள்ளன. ஜே.வி.பியும் ஜனாதிபதி தேர்தலுக்காக அமைத்த கூட்டணியின் கீழ் போட்டியிடத் தயாராகி வருவதோடு தமிழரசுக்கட்சி, சி.விவிக்னேஷ்வரன் தலைமையிலான கூட்டணி என்பனவும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இது தவிர பல சுயேச்சைக்குழுக்களும் சிறு கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருவதோடு இவ்வாரம் முதல் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் ஏற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்க இருக்கிறது. (பா)

ஷம்ஸ் பாஹிம்

Related posts